326
ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகிளம் பேடை
உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்
சிறையுஞ் செற்றையும் புடையுந ளெழுந்த
5பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்
கவிர்ப்பூ நெற்றிச் சேவலிற் றணியும்
அருமிளை யிருக்கை யதுவே மனைவியும்
வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது
படமடைக் கொண்ட குறுந்தா ளுடும்பின்
10விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் விதவை
யாணர் நல்லவை பாணரொ டொராங்கு
வருவிருந் தயரும் விருப்பினள் கிழவனும்
அருஞ்சமந் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்
தண்ணல் யானை யணிந்த
15பொன்செ யோடைப் பெரும்பரி சிலனே.

(பி - ம்.) 3 ‘புலாவிட்டியாற்றச்’6 ‘கதிர்ப்பூ’, ‘தணிவும்’ 7 ‘அருமுனை’ 9 ‘படபடைக்’

திணை - வாகை; துறை - மூதின்முல்லை.

தண்காற் பூட்கொல்லனார் (பி -ம்.) தண்காற்...பொற்கொல்லனார்,

முடக்கொல்லனார், தங்கான்றாடகோலரை, தங்காலநாட் கோவலனார்.


(கு - ரை.) 1. வேலியைச்சார்ந்துள்ள காட்டுப்பூனையால்; பார்நடை வெருகு -தான் கவர்ந்துகொள்ளுதற்குரிய கோழிமுதலியவற்றைப்பார்த்து மெல்ல நடத்தலையுடைய வெருகு; “ஈர்முள் வேலிப்புலவுநாறு முன்றில், எழுதி யன்ன கொடிபடு வெருகின்,பூளை யன்ன பொங்குமயிர்ப் பிள்ளை" (அகநா.297 : 12 - 4) என்பதையும், "வெவ்வாய் வெருகினைப்பூசை யென்றலும்" (தொல். மரபு. சூ. 68) என்பதையும்,‘படப்பை வேலியும் புதலும்பற்றி விடக்கிற்கு வேற்றுயிர்கொள்ளும்வெருகு' என்னும் பேராசிரியருரையையும் பார்க்க.

1 - 2. வெருகாகிய பகைக்கு அஞ்சியகோழிப்பேடை ; எழுவாய்.

3. புலா - புலாவை ; வாயிலுள்ள தசையை; அகநா. 79 : 14.

2-3. "மனையுறை கோழிக் குறுங்காற்பேடை, வேலி வெருகின மாலை யுற்றெனப், புகுமிட னறியாதுதொகுபுடன் குழீஇப், பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந்தாஅங்கு" (குறுந். 139 : 1 - 4.)

4. சிறை - பக்கம். செற்றை - சிறுதூறு; "செற்றை வாயில்" (பெரும்பாண். 149).புடையுநள் - அடித்துத் தூத்தலையுடையளாய்.

5. பருத்திப்பெண்டின் - பருத்திநூற்கும்மங்கையின்; "பருத்திப் பெண்டின் பனுவ லன்ன"(புறநா. 125 : 1). விளக்கத்தாற்காணப்பட்ட.

6. கவிர்ப்பூ - முள்ளுமுருங்கைப்பூ. சேவலின்- ஆண்கோழியால்; "கவிரலர் பூத்த சென்னி வாரணம்"(கல். பாயிரம், 2). தணியும் - நீங்கும்.

கோழிப்பேடை (2) அந்நடுக்கந் தணியும்(6)

7. "அருமிளை யிருக்கை யதுவே" (புறநா.325 : 13)

8. சேட்புலம் - நெடுந்தூரமாகிய இடம்.

10. விழுக்காகியநிணம்; விழுங்குதற்குரியநிணமுமாம் ; "விழுக்கொடு வெண்ணஞ்சு" (சீவக.1584). விதவை - கூழ்.

9 - 10. பெரும்பாண். 132 - 3.

11. யாணர் - புதிது. நல்லவை - நல்லஉணவுகளை. ஒராங்கு - ஒருபடியாக.

9 - 11. "உடும்பிழு தறுத்த வொடுங்காழ்ப்படலைச், சீறின் முன்றிற் கூறுசெய் திடுமார், கொள்ளிவைத்த கொழுநிண நாற்றம்" (புறநா. 325 : 7 - 9)

மனைவியும் (7) விருப்பினள் (12)

12. கிழவன் - தலைவன்.

13. ததைய - சிதைய ; "அருஞ்சமஞ்சிதையத்தாக்கி" (புறநா. 72 : 8) ; "ததைந்த காஞ்சியொடு"(பதிற். 23 : 19)

15. ஓடை - நெற்றிப்பட்டம். 14 - 15. புறநா.334 : 8 - 10.

(326)