43
நிலமிசை வாழ்ந ரலமர றீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ்சிறைக்
5கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா வீகை யுரவோன் மருக
நேரார்க் கடந்த முரண்மிகு திருவிற்
10றேர்வண் கிள்ளி தம்பி வார்கோற்
கொடுமர மறவர் பெரும கடுமான்
கைவண் டோன்ற லைய முடையோன்
ஆர்புனை தெரியனின் முன்னோ ரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது
15நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவா யென்னினும்
நீபிழைத் தாய்போ னனிநா ணினையே
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக்
20காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின்
யானே பிழைத்தனென் சிறக்கநின் னாயுள்
மிக்கு வரு மின்னீர்க் காவிரி
எக்க ரிட்ட மணலினும் பலவே.

(பி - ம்.) 5. ‘பருந்தினெறி’ 7 ‘தபுதிகண்டஞ்சிச்’ 11 ‘கொடுவின் மறவர்’ 14 ‘செய்யார்’ 22 ‘வருநீர்க்’

திணையும் துறையும் அவை.

சோழன் நலங்கிள்ளிதம்பி மாவளத்தானும் தாமப்பல்கண்ணனும் வட்டுப்பொருவுழிக் கைகரப்ப வெகுண்டு வட்டுக்கொண்டெறிந்தானைச் சோழன்மகனல்லையென நாணியிருந்தானைத் தாமப்பல்கண்ணனார் பாடியது.

(இ - ள்.) நிலத்தின்மேல் உயிர்வாழ்வார்க்கு வெம்மையான் உளதாகிய சுழற்சி நீங்கச் சுடுகின்ற கதிரையுடைய ஞாயிற்றினது வெப்பத்தைத் தாம் பொறுத்துக் காற்றை உணவாகக்கொண்டு அச்சுடருடனே சூழவரும் விளங்கிய சடையையுடைய அருந்தவரும் வியப்பான் மயங்க, வளைந்த சிறகினையும் கூரிய உகிரினையுமுடைய பருந்தினது எறிதலைக் கருதி அதனைத் தப்பித் தன்னிடத்தை யடைந்த குறிய நடையையுடைய புறாவினது அழிவிற்கு அஞ்சித் தன்னழிவிற்கு அஞ்சாது துலாத்தலையுட்புக்க வரையாத வண்மையையுடைய வலியோனது மரபினுள்ளாய்! பகைவரை வென்ற மாறுபாட்டான் மிக்க செல்வத்தையுடைய தேர்வண் கிள்ளிக்குத் தம்பி! நீண்ட அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய மறவர்க்குத் தலைவ! விரைந்த குதிரையையுடைய கைவள்ளியதோன்றால்; நினது பிறப்பின்கண் ஐயப்பாடுடையேன்; ஆத்தியாற் செய்யப்பட்ட தாரையுடைய நினக்கு முன்னுள்ளார் யாவரும் பார்ப்பார் வெறுக்கத்தகுவன செய்யார்; மற்று இவ்வெறுக்கத்தக்க செய்கை நினக்கு நீர்மையை யுடைத்தோவென்று, நீ வெறுக்கச்சொல்லி நினக்கு யான் செய்த தவற்றிற்கு வெறாயென்னினும், நீ தவறு செய்தாய் போல மிக நாணினாய்; இவ்வாறு தம்மைத் தப்பியவரைப் பொறுக்குந் தலைமை இக்குலத்தின்கட் பிறந்தோர்க்கு எளிமையுடைத்துக் காணுமெனக் காணத்தக்க வலியையுடையோய்! நீ அறிவித்தாய்; ஆகலின், யானே தவறுசெய்தேன்; பெருகிவரும் இனிய நீரையுடைய காவிரி கொழித்திடப்பட்ட மணலினும் பலவாக நின் வாழ்நாள் சிறப்பதாக-எ - று.

முனிவரென்றது வேணாவியோரை; அன்றி, சுடர் திரிந்தவழித் திரிந்து தவஞ்செய்யு முனிவரென்றும் உரைப்ப.

சீரை - துலாக்கோற்றட்டு.

‘மற்றிது, நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி’ என்றது, சூது பொருவுழிக் கையாற் கவறுபுதைப்ப வெகுண்டு 1வட்டுக்கொண்டெறிந்தானை ‘இவ்வாறு செய்தல் நின்பெருமைக்குப் பொருந்துமோ? அதனால் நின்பிறப்பிலே ஓர் ஐயமுடையேன்’ என்ற சொல்லை.

இது பொறுத்தற்கரிய பிழையைப் பொறுத்த குணவென்றியான் அரசவாகையாயிற்று.


(கு - ரை.) 1. அலமரல் - சூரியவெப்பத்தால் உண்டாகும் சுழற்சி.

2 - 4. “விண்செலன் மரபினையர்” (முருகு. 107) என்பதற்கு ‘ஞாயிற்றின் வெம்மையைப் பல்லுயிரும் பொறுத்தலாற்றாவென்று கருதித் தமதருளினாற் சுடரொடு திரிந்து அவ்வெம்மையைப் பொறுக்கின்ற முனிவர்’ என்று நச்சினார்க்கினியர்விசேடவுரை யெழுதி இவ்வடிகளை மேற்கோள் காட்டியிருத்தலும், “சுடரொடு திரிதரு முனிவரும்” (சிலப். 12: ‘அவிப்பலி’) என்பதும், ‘ஆதித்தன் வெப்பந்தணிதல் காரணமாக அவனுடனே கூடித் திரியும் முனிவரும்’, ‘கதிரவனுடைய வெம்மை உயிர்களை வருத்தாமல் அதனைத் தாங்கி அவனுடனே சுழன்று திரிதலைச்செய்யும் தெய்வ விருடிகளும்’ என்னும் அதன் உரைகளும் இங்கே அறிதற்பாலன.

6 - 7. ‘என்புமுரியராதல், தன்னகம்புக்க.........சீரைபுக்கோன் முதலாயினார்கட் காண்க’ (குறள், 72, பரிமேல்.)

6 - 8. இவ்வடிகளாற் கூறிய அவ்வரசன்பெருமை கொடையால் உண்டாகிய வீரச்சுவைக்கு உதாரணம் ; தொல். மெய்ப்பாடு. சூ. 9, பேர்.

4 - 8. புறநா. 37 : 5 - 6, குறிப்புரை.; “சேர்ந்த புறவி னிறைதன் றிருமேனி, ஈர்ந்திட் டுயர்துலைதா னேறினான்-நேர்ந்த, கொடைவீரமோமெய்ந் நிறைகுறையா வன்கட், படைவீர மோசென்னி பண்பு” (தண்டி. மேற்.)

21 - 3. ஒரு தலைவனை வாழ்த்துங்கால் அவன் ஆட்சிக்குரிய ஆறு முதலியவற்றின் மணலினும் நீ வாழ்க என்று அவனை வாழ்த்துதல் மரபு; அதனை இந்நூல் 9-ஆம் செய்யுளாலு முணர்க.

மு. ‘நிலமிசைவாழ்நரென்னும் புறப்பாட்டுப் புலவன் அரசனை வைது ஆறி அது நன்குரைத்தல்; அஃது இயற்கை வகையானன்றிச் செயற்கைவகையாற் பரவலும் புகழ்ச்சியுந் தொடர்ந்த முன்னோர் கூறிய குறிப்பு’ (தொல். புறத்திணை. சூ. 27, ந.)

(43)


1. இச்செயல் தருமபுத்திரர்மீது கோபத்தால் விராடவரசன் கவறு கொண்டெறிந்த செய்தியை நினைப்பூட்டுகின்றது.