250
குய்குரன் மலிந்த கொழுந்துவை யடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற் புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்
கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
5அல்லி யுணவின் மனைவியோ டினியே
புல்லென் றனையால் வளங்கெழு திருநகர்
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.

திணையும் துறையும் அவை.

...............தாயங்கண்ணியார் பாடியது.

(இ - ள்.) தாளிப்போசை மிக்ககொழுவிய துவையோடுகூடிய அடிசில் இரவலரைத் தன்கண்ணேதகைத்த வாயிலினையும் தன்னாற் புரக்கப்படுவோர்கண்ணீரை மாற்றிய குளிர்ந்த நறிய பந்தரினையுமுடையமனையிடத்து மயிரைக் குறைத்துக் குறியவளையைக்களைந்து அல்லியரிசியாகிய உணவை யுடைய மனையாளுடனேஇப்பொழுது பொலிவழிந்தாய், செல்வம்பொருந்தியஅழகாகிய நகரே! வான்சோற்றைக் கொண்டு இனியபாலை வேண்டும் வெறுப்பைத் தம்மிடத்தேயுடைய புதல்வர்தந்தை தனியிடத்தையுடைய புறங்காட்டை அடைந்தபின்- எ - று.

கொய்து நீக்கியென்னும் வினையெச்சங்களைஉணவினையுடைய வென்னுங் குறிப்புவினையோடு முடிக்க.

நகரே! நீ புதல்வர்தந்தை காடு முன்னியபின்புல்லென்றனையெனக் கூட்டுக.

முனித்தலை - குடுமித்தலையெனினும்அமையும்.


(கு - ரை.) 4. புறநா. 253, 254,261, 280.

5. புறநா. 248 : 4 - 5.

6. தொல். குற்றியலுகரப். சூ. 76,ந. மேற்.

7. புறநா. 261 : 19.

8. ‘’முனித்தலைக் கண்ணி நெற்றிச்சிறார்” (சீவக. 2541); பெருங். 2. 2 : 107

(250)