249
கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொளிப்பக்
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ
எரிப்பூம் பழன நெரித்துடன் வலைஞர்
அரிக்குரற் றடாரியின் யாமை மிளிரப்
5பனைநுகும் பன்ன சினைமுதிர் வராலொ
டுறழ்வே லன்ன வொண்கயன் முகக்கும்
அகனாட் டண்ணல் புகாவே நெருநைப்
பகலிடங் கண்ணிப் பலரொடுங் கூடி
ஒருவழிப் பட்டன்று மன்னே யின்றே
10அடங்கிய கற்பி னாய்நுதன் மடந்தை
உயர்நிலை யுலக மவன்புக....... லரி
நீறாடு சுளகிற் சீறிட நீக்கி
அழுத லானாக் கண்ணள்
மெழுகு மாப்பிகண் கலுழ்நீ ரானே.

திணையும் துறையும் அவை.

.................தும்பி சொகினனார் (பி - ம். தும்பிசேர்கீரனார்) பாடியது.

(இ - ள்.) கதிர்நுனைபோலும் மூக்கையுடையஆரன்மீன் சேற்றின் கீழே செருகத் திரண்ட (மிசையாகிய)கோட்டையுடைய வாளைமீன் நீர்மேல் பிறழ எரிபோலும்நிறத்த பூனையுடைய பொய்கைகளை நெருங்கி உடனேவலைஞரானவர், ஒலிநிரம்பாத ஓசையையுடைய கிணையினதுமுகமேபோலும் யாமை பிறழப் பனையினது நுகும்பையொத்தசினை முற்றிய வராலோடு மாறுபடும் வேல்போன்றஒள்ளிய கயலை முகந்து கொள்ளும் முன்னகன்றநாட்டையுடைய குருசிலது உணவு நெருநலை நாளாற் பகுத்தஇடத்தைக் கருதிப் பலருடனே இயைந்து ஒருவழிப் பட்டது;அது கழிந்தது; இன்று, தன்கண்ணேயடங்கிய கற்பினையும்சிறிய நுதலினையுமுடைய மடந்தை உயர்ந்த நிலைமையையுடையவிண்ணுலகத்தே அவன் சென்று புக அவனுக்கு உணவு கொடுத்தல்வேண்டிச் சுளகுபோலச் சிறிய இடத்தைத் துடைத்துஅழுதலமையாத கண்ணையுடையளாய்த் தன்கண்கலுழ்கின்ற நீராலே சாணாகத்தைக் கொண்டு மெழுகுமளவிலேபட்டது-எ - று.

மெழுகுமளவாயிற்றென்றது பொருளெனவுரைக்க.

மன் கழிவின்கண் வந்தது.

இது, கண்டார் நிலையாமை கூறி இரங்கியவாறு.


(கு - ரை.) 2. ‘’கணைக்கோட்டுவாளைக் கமஞ்சூன் மடநாகு” (குறுந். 164)

4. புறநா. 70 : 2 - 3, குறிப்புரை, 369: 21.

5. தொல். மரபு. சூ. 86, பேர்.மேற்; ‘நுகும்பென்பது பனை வாழை மரல் புல் என்பவற்றிற்குரித்து’(நன். சூ. 387, மயிலை.)

6. புறநா. 287 : 4. 11. புறநா. 229: 22.

12. புறநா. 234 : 2.

14. சீவக. 2984.

தொல். எச்ச. சூ. 47. ., இ.வி. சூ. 168, உரை, மேற்; ‘மெழுகு மாப்பிகண் கலுழ்நீரானே: என்புழிக் கணவனை யிழந்தாள் அவற்குப் பலிக்கொடைகொடுத்தற்கு மெழுகுகின்றாளைக் கண்ணீரே நீராக மெழுகுகின்றாளென்றமையின்இது தன்கட்டோன்றிய இழவுபற்றிப் பிறந்த அவலச்சுவையாயிற்று’(தொல். மெய்ப்பாடு. சூ. 5, பேர்.; இ. வி. சூ.578, உரை)
மு. காஞ்சித்திணைத்துறைகளுள், ‘தாமே யேங்கியதாங்கரும் பையுள்’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 24, .

(249)