195
பல்சான் றீரே பலசான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
5பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.

(பி - ம்.) 6 ‘நல்லவை’ 9 ‘நெறியுமற்றதுவே’

திணை - அது: துறை - பொருண்மொழிக்காஞ்சி.

நரிவெரூஉத்தலையார் பாடியது.

(இ - ள்.) பல அமைந்த குணங்களையுடையீர்! பல அமைந்த குணங்களையுடையீர்! கயலினது முட்போன்ற நரைமுதிர்ந்த திரைந்த கதுப்பினையும் பயனில்லாத முதுமையையுமுடைய பல அமைந்த குணங்களை யுடையீர்! மழுவாகிய கூரிய படைக்கலத்தினையும் கடிய வலியினையுமுடைய ஒருவன் பாசத்தாற் கட்டிக்கொண்டு போங்காலத்து இரங்குவீர் நீர்; நல்வினையைச்செய்ய மாட்டீராயினும் தீவினையைச் செய்தலைப் பரிகரிமின்; அதுதான் யாவரும் புகழ்வரென்றது ஒழியவும் நல்ல நெறியின் கண்ணே செலுத்தும் வழியும் அதுதான்-எ - று.

1பலராகிய சான்றீரென்பது, பல்சான்றீரெனத் தொக்கது; “பல்குட்டுவர்” (மதுரைக். 105) என்பதுபோல.

பலவாகிய குணங்களால் அமைந்தீரெனினும் அமையும்.

பயனின் மூப்பென்றுவைத்துப் பல்சான்றீரேயென்றது இகழ்ச்சிக்குறிப்பு; அடுக்கு, விரைவின்கண் வந்தது.


(கு - ரை.) 1. புறநா. 246 : 1.

‘பல’ என்னும் சொன்முன் பிறவரின் அகரம் விகற்பித்து வருமென்பதற்கும் (நன். சூ. 169, மயிலை.), ரகரவீற்று உயர்திணைப்பெயரின் ஈற்றயலாகாரம் ஈகாரமாய் ஏற்றதற்கும் (நன். வி. சூ. 309) மேற்கோள்.

2. “கரிந்தநீள் கயன்முள்ளி னரையும்” (திருவிளை. விருத்த. 20)

1-3. சொல்லுவான் குறிப்பினாற் பொருளறியவந்ததற்கு மேற்கோள்; நன். சூ. 268, மயிலை; நன். வி. சூ. 269.

4. ஒருவன் - யமன்.

6-7. “வறுமையா, லீத லிசையா தெனினு மிரவாமை, யீத லிரட்டி யுறும்” (நாலடி. 95)

பாடாண்டிணைத் துறைகளுள், ஓம்படைபற்றி வந்ததற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 30, இளம்.

மு. காஞ்சித்திணைத்துறைகளுள் ‘கழிந்தோரொழிந்தோர்க்குக் காட்டியமுதுமை’ என்பதற்கு மேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 19, இளம்.); ‘பல்சான்றீரே......அதுவே: இது வீடு ஏதுவாகவன்றி வீடுபேற்றுநெறிக்கட் செல்லும் நெறியேதுவாகக் கூறியது’ (தொல். புறத்திணை. சூ. 24. .)

(195)


1. தொல். தொகைமரபு, சூ. 11, ந. பார்க்க.