381
ஊனு மூணு முனையி னினிதெனப்
பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துறுத் தாற்றி யிருந்தனெ மாகச்
5சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென
யாந்தன் னறியுந மாகத் தான்பெரி
தன்புடை மையி னெம்பிரி வஞ்சித்
துணரியது கொளாஅ வாகிப் பழமூழ்த்துப்
பயம்பகர் வறியா மயங்கரின் முதுபாழ்ப்
10பெயல்பெய் தன்ன செல்வத் தாங்கண்
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி
ஊன்சுகிர் வலந்த தெண்க ணொற்றி
விரல்விசை தவிர்க்கு மரலையில் பாணியின்
15இலம்பா டகற்றல் யாவது புலம்பொடு
தெருமர லுயக்கமுந் தீர்க்குவோ மதனால்
இருநிலங் கூலம் பாறக் கோடை
வருமழை முழக்கிசைக் கோடிய பின்றைச்
சேயை யாயினு மிவணை யாயினும்
20இதற்கொண் டறிநை வாழியோ கிணைவ
சிறுநனி, ஒருவழிப் படர்கென் றோனே யெந்தை
ஒலிவெள் ளருவி வேங்கட நாடன்
உறுவருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கும்
அறத்துறை யம்பியின் மான மறப்பின்
25றிருங்கோ ளீராப் பூட்கைக்
கரும்ப னூரன் காதன் மகனே.

(பி - ம்.) 1‘முணைஇயவினிதென’ 2 ‘பாஅறபெய்தவும்’ 8 ‘துணரியதுளவாகி’ 9 ‘பயம்பகர்பறியா’, ‘முதுபாட்’ 10 ‘தாங்கினி தீயா’ 11 ‘புறங்கடைக்கொன்றி’ 12 ‘சிதாஅரளமபிற............தடாரிடை’ 13 ‘ஊனுகிர்வலந்த தென்கண்’ 20 ‘டறிகை’ 24 ‘பிறப்பினறிருககொளளாப’

திணையும் துறையும் அவை.

கரும்பனூர்கிழானை நன்னாகனார்.


(கு - ரை.) 1. ஊன் - இறைச்சி ; ஊண் - அடிசில். முனையின் - வெறுத்தால்.

2. பாகு - வெல்லப்பாகு ; "காரகற் கூவியன் பாகொடு பிடித்த, விழைசூழ் வட்டம்" (பெரும்பாண். 377 - 8)

3. அளவுபு கலந்து - நன்றாகக்கலந்து.

1 - 3. "சுவைய, வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ" (பொருந. 107 - 8)

4. விருந்து - புதுமை. ஆற்றி - பசியைத் தணித்துக்கொண்டு.

5. சென்மோ - வருவாயாக.

1 - 5. "ஊனு மூணு முனையினென்னும் புறப்பாட்டினுள் ‘சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென’ என்பதனையும் தன்மைக் கண் ‘மோ’ வருமென இவ்வாறு அமைத்தலுமொன்று ; அன்றிப் பெரும! எம்விழவுடை நாட்டே நீ செல்லென்று சுற்றத்தார் தலைவனை நோக்கிக்கூற அப்பொருநனும் பாட்டுடைத்தலைவனை நோக்கிப் பின்னும் கூறினானாகப் பொருள் கூறுதலுமொன்று" (தொல். இடை. சூ. 27, .)

6. அறியுநமாக - அறிவேமாக.

6 - 7 " நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரி, துவந்த வுள்ளமோ டமர்ந்தினிது நோக்கி" (மலைபடு. 559 - 60)

8. துணரியது - குலைகொண்டது ; "பைம்பாகற் பழந்துணரிய, செஞ்சுளைய கனி" (பொருந. 191 - 2). ஊழ்த்து -செவ்வியழிந்து.

9. பகர்வு - கொடுத்தல். அரில் - சிறுதூறுகள். முதுபாழில்.

12. சிதாஅர் வள்பு - துண்டித்த வார் ; "சிதாஅர் வள்பினென்றெடாரி" (புறநா. 376 : 4)

14. அரலை - குற்றம். பாணியின் - பாட்டால்.

17. கூலம் - பலபண்டம். 19. இவணை - இவ்விடத்துள்ளாய்.

23. உறுவர் - பெரியோர்.

24. அறத்துறையம்பி - தருமவோடம் ; "பிறவி யென்னும் பெருங்கடல் விடூஉம், அறவிநாவாய்" (மணி. 11 : 24 - 5)
மகன் (26) படர்கென்றோனே (21)

மு. தொல். புறத்திணை. சூ. 30, இளம். ; சூ. 30, ந. மேற்.

(381)