15
கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்
புள்ளின மிமிழும் புகழ்சால் விளைவயல்
5வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத்
தேர்வழங் கினைநின் றெவ்வர் தேஎத்துத்
துளங்கியலாற் பணையெருத்திற்
பாவடியாற் செறனோக்கின்
ஒளிறுமருப்பிற் களிறவர
10காப்புடைய கயம்படியினை
அன்ன சீற்றத் தனையை யாகலின்
விளங்குபொன் னெறிந்த நலங்கிளர் பலகையொடு
நிழல்படு நெடுவே லேந்தி யொன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
15நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில்
நற்பனுவ னால்வேதத்
தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
20வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூப நட்ட வியன்களம் பலகொல்
யாபல கொல்லோ பெரும வாருற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவிற்
பாடினி பாடும் வஞ்சிக்கு
25நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே.

(பி - ம்.) 2 ‘பேழ்வாய்க்’

திணையும் துறையும் அவை.

1 பாண்டியன் பல்யாகசாலைமுதுகுடுமிப்பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

(இ - ள்.) விரைந்த தேர்குழித்த தெருவின்கண்ணே வெளிய வாயையுடைய கழுதையாகியபுல்லிய நிரையைப் பூட்டி உழுது பாழ்படுத்தினைஅவருடைய அகலிய இடத்தையுடைய நல்ல அரண்களை;

புள்ளினங்கள் ஒலிக்கும்புகழமைந்த விளைகழனிக்கண்ணே வெளிய தலை யாட்டம்அணிந்த மனஞ்செருக்கிய குதிரையினுடைய கவிந்தகுளம்புகள் தாவத் தேரைச் செலுத்தினை நின்னுடையபகைவர் தேயத்துக்கண்; அசைந்த தன்மையோடு பெரியகழுத்தினையும் பரந்த அடியோடு வெகுட்சி பொருந்தியபார்வையினையும் விளங்கிய கோட்டினையுமுடையகளிற்றை அப்பகைவருடையனவாகிய காவலையுடையவாவிக்கட் படிவித்தனை; அப்பெற்றிப்பட்ட சினத்துடனேஅதற்கேற்ற செய்கையையுடையை; ஆதலான், விளங்கியஇரும்பாற் செய்யப்பட்ட ஆணியும் பட்டமும் அறைந்தஅழகு மிக்க பலகையுடனே நிழலுண்டாகிய நெடிய வேலைஎடுத்துப் பகைவர் ஒள்ளிய படைக்கலங்களை யுடையநினது விரைந்த தூசிப்படையின் வலியைக் கெடுத்தல்வேண்டித்தம் ஆசை கொடுவர வந்தோர் அவ்வாசை பின் ஒழியவசையுண்டாக உயிர்வாழ்ந்தோர் பலரோ? குற்றமில்லாதநல்ல தருமநூலினும் நால்வகைப்பட்ட வேதத்தினுஞ் சொல்லப்பட்டஎய்தற்கரிய மிக்க புகழையுடைய சமிதையும் பொரியும்முதலாகிய பெரிய கண்ணுறையோடு நெய்மிக்க புகை மேன்மேற்கிளரப் பல மாட்சிமைப்பட்ட கெடாத தலைமையையுடையயாகங்களை முடித்துத் தூண் நடப்பட்ட அகன்றவேள்விச்சாலைகள் பலவோ? இவற்றுள், யாவையோ பல?பெரும! வார்பொருந்தி வலித்துக் கட்டுதலை பொருந்தியமார்ச்சனை செறிந்த தண்ணுமையையுடைய விறலிபாடும்மேற்செலவிற்கு ஏற்ப, ஆராய்தலமைந்த வலியையுடையோய்!நினக்கு - எ - று.

பூட்டி (2) என்னும் வினையெச்சத்திற்குஉழுதென்னுஞ்சொல் தந் துரைக்கப்பட்டது. நற்பனுவலாகியநால்வேதம் (17) என்பாருமுளர். நற்பனுவல் நால்வேதத்துவேள்வியென இயையும்.

பெரும! மைந்தினோய்! பாழ்செய்தனை;தேர் வழங்கினை; கயம் படியினை; ஆகலின், நினக்குஒன்னாராகிய வசைபடவாழ்ந்தோர் பலர் கொல்?யூபம் நட்ட வியன்களம் பலகொல்? இவற்றுள், யா பலகொல்லோ எனக்கூட்டி வினைமுடிவுசெய்க.

விளங்கு பொன்னெறிந்த (12) என்பதற்குகண்ணாடி தைத்த எனினும் அமையும். தார் முன்பு தலைக்கொண்மார்(14) என்பதற்குத் தாரை வலியால் தலைப்படவெனினும்அமையும்.

புரையுநற்பனுவல் (16 - 7) என்பதூஉம்பாடம்.

யா பலவென இவ்விரண்டின்பெருமையும் கூறியவாறு.

இவை எப்பொழுதுஞ் செய்தல் இயல்பெனக்கூறினமையின், இஃது இயன்மொழியாயிற்று.


(கு - ரை.) 1. மு. அகநா. 326 : 4; பெரும்பாண்.397. கடியென்னும் உரிச்சொல் விரைவுப் பொருளை உணர்த்துமென்பதற்குமேற்கோள்; தொல். உரி. சூ. 85, ந.; இ. வி. சூ.282, உரை.

1 - 3. பகைவர் மதிலையழித்துக்கழுதையேரால் உழுது வெள்ளை வரகும் கொள்ளும் வித்துதல்மரபு; புறநா. 392 : 9 - 11; “எழுதெழின் மாடத் திடனெலாநூறிக், கழுதையேர் கையொளிர்வேல் கோலா - உழுததற்பின்,வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற்,கள்விரவு தாரான் கதம்” (பு. வெ. 120); “வடதிசைமன்னர் மன்னெயின் முருக்கிக், கவடி வித்திய கழுதையேருழவன்” (சிலப். 27 : 225 - 6) ; “இடித்து வெளிசெய்துநக ரெங்கணு நுழைந்தாங், கடுத்தமட வார்வயிறலைத்தன ரிரங்கக், கொடுத்திடு வளங்கள் பல கொள்ளைக்கொடுமண்ணின், எடுத்துவரு வெள்வரகு கொள்ளுட னிறைத்து”(காஞ்சிப். நாடு. 28). இவ்வடிகளை மக்கட்பாடாண்டிணைக்குரியதுறையாகிய மண்ணுமங்கலத்திற்கு உதாரணமாகக் காட்டுவர்;தொல். புறத்திணை. சூ. 36, ந.

3 - 5. புறநா. 16 : 1 - 4.

8 - 10. புறநா. 16 : 6, 23 : 1 - 2.

12. புறநா. 14 : 3. 14. கொண்மார்: முருகு. 173.

15. ‘பிறக்கு என்பது அசைநிலையாகவருமென்பதற்கு மேற்கோள்; தொல். இடை. சூ. 30. தெய்வச்.;சூ. 31. ந. : . வி. சூ. 277, உரை.

18. கண்ணுறை : புறநா. 61 : 5, 140 : 4.

19 - 20. புறநா. 166 : 22 - 3.

1 - 21. “ ‘கடுந்தேர்......எயில்’என எயிலழித்தவாறு கூறி, ‘வீயாச்சிறப்பின்.......நாட்டி’எனவே ஒருவாற்றான் மண்ணியவாறுங் கூறியவாறு காண்க”(தொல். புறத்திணை. சூ. 36, ந.)

22. “காழி லாவறு பத்துநான் கெனுங்கலையானும், வாழி வென்று வென் றலைகடல் வரைப்பெலாநாட்டும், கேழில் வாகைய மதலையுங் கிளர்மறை முறையான்,வேழ்வி யாற்றிய யூபமும் விறந்தன வனேகம்” (காஞ்சிப்.நகரேற்றுப். 183)

15 - 22. சிறப்பினான் அஃறிணைமுடிபேற்றதற்குமேற்கோள;் நன். மயிலை. சூ. 377; நன். வி. சூ.378; இ. வி. சூ. 298, உரை.

24. புறநா. 33 : 10.

(15)


1. இப்பாட்டின் 20 - 21 - ஆம் அடிகளால்தலைவனுடைய பெயர்க் காரணம் புலப்படுகின்றது.