291
சிறாஅஅர் துடியர் பாடுவன் மகாஅஅர்
தூவெள் ளறுவை மாயோற் குறுகி
இரும்புட் பூச லோம்புமின் யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்
5என்போற் பெருவிதுப் புறுக வேந்தே
கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத் தன்றலை
மணிமருண் மாலை சூட்டி யவன்றலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே.

(பி - ம்.) 1 ‘துடியபாடு’ 3 ‘இறும்புபூட்பூசல்’,‘இரும்பூட்பூசல்’ 4 ‘விளரிக்கோடின வெண்ணரிகடிவென்’5 ‘எம்போல்’

திணை - அது; துறை - வேத்தியல்.

நெடுங்கழுத்துப் பரணர்.


(கு - ரை.) 1. சிறாஅஅர் - சிறுவர்களே. துடியர் -துடிப்பறை கொட்டுபவர்களே. பாடுவல் மகாஅஅர் - பாடுதலில்வல்ல பாண்மக்களே.

இவ்வடி, ரகாரவீற்று அளபெடைப்பெயர் மாத்திரைமிக்குஇயல்பாய் விளியேற்றற்கு மேற்கோள்; தொல்.விளி. சூ. 24, ந.

2. தூ வெள் அறுவை - மிகவும் வெள்ளிய ஆடை; புறநா.279 : 8, 286 : 5. மாயோற் குறுகி - கரியநிறத்தையுடையோனைநெருங்கி.

3. இரும்புட்பூசல் - பறவைகளின் ஆரவாரத்தை;பறவைகளைப் போலப் பெருமுழக்கஞ் செய்தல்; அவனுற்றபெரும்புண்ணைக் குறித்து அழுதலைச் செய்த லெனினுமாம்.ஓம்புமின் - பரிகரியுமின்.

4. விளரி - இரங்கற்பண். கொட்பு - சுழற்சி. கடிகுவென்- விலக்குவேன். இரங்கற்பண்ணைப் பருந்தின் சுழற்சிபோலவட்டமிட்டுப் பாடுதலால், அங்கே வரும் நரிகளை ஓட்டுவேன்;இந்த இசையொலியைக் கேட்டு நரிகள் ஓடுமென்றபடி.

5. அரசன் என்னைப்போலப் பெரியநடுக்கத்தையுடையவானாக;புறநா. 255 : 3; நற். 293 : 5 - 6.

6. கொன்னுஞ்சாதல் வெய்யோற்கு - ஒரு பயனின்றியும்போரிற்சாதலில் விருப்பமுள்ளவனுக்கு; “மண்டமர்நசையொடு கண்படை பெறாஅது” (முல்லைப். 67); “புட்பகைக்,கேவா னாகலிற் சாவேம்யாமென”, “பொதுவிற் றூங்கும்விசியுறு தண்ணுமை, வளிபொரு தெண்கண் கேட்பின்,அதுபோ ரென்னு மென்னையுமுளனே” (புறநா. 68, 89) என்பவற்றால்வீரர்க்குப் போர்விருப்பமும் போரிற் சாதலில்விருப்பமும் உண்மை அறியலாகும்.

7. மணிமருள்மாலை சூட்டி - பலவகை மணிகள் விரவியபலவட முள்ள மாலையை அவ்வீரனுக்குச் சூட்டி; மருளுதல் -கலத்தல்.

8. ஒருகாழ் - ஒற்றைவடம். மலைந்தனன் - சூடினான்.

மு. ‘கொடுத்த லெய்திய கொடைமை’ என்பதற்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 8, .

(291)