141
பாணன் சூடிய பசும்பொற் றாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர்
5யாரீ ரோவென வினவ லானாக்
காரெ னொக்கற் கடும்பசி யிரவல
வென்வே லண்ணற் காணா வூங்கே
நின்னினும் புல்லியே மன்னே யினியே
இன்னே மாயினே மன்னே யென்றும்
10உடாஅ போரா வாகுத லறிந்தும்
படாஅ மஞ்ஞைக் கீத்த வேங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யாயினு மீத்த னன்றென
மறுமை நோக்கின்றோ வன்றே
15பிறர், வறுமை நோக்கின்றவன் கைவண் மையே.

(பி - ம்.) 7 ‘வெல்வேல்’

திணை - அது; துறை - பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையுமாம்.

வையாவிக்கோப் பெரும்பேகனைப் பரணர் பாடியது.

(இ - ள்.) 'பாணன் சூடிய ஓட்டற்ற பொன்னாற் செய்யப்பட்ட தாமரைப்பூ மாட்சிமைப்பட்ட அணியினையுடைய விறலி அணிந்த பொன்னரிமாலையுடனே (பொன்னரிமாலை - பொன்னை மலராக அரிந்து தொடுத்தமாலை). விளங்கக் கடிய குதிரையைப் பூண்ட நெடிய தேரைப் பிணிப்பைவிட்டு இளைப்பாறி ஊரின்கண் இருந்தீர்போலச் சுரத்திடை யிருந்தீர்! நீர் யாவிர் பாணரோ' என எம்மைக் கேட்டல் அமையாத புல்லென்ற சுற்றத்தையும் மிக்க பசியையுமுடைய இரவலனே! வென்றி வேலையுடைய தலைவனைக் காண்பதன்முன் யாம் நின்னினும் வறியேம்; இப்பொழுது அவ்வறுமை நீங்கி இத்தன்மையேமாயினேம்; எந்நாளும் உடா போராவாதலை அறிந்துவைத்தும் பாடாத்தினை மயிலுக்குக் கொடுத்த எம் இறைவன், மதமிக்க யானையினையும் மனஞ்செருக்கிய குதிரையினையு முடைய பேகன், எவ்வளவாயினும் கொடுத்தல் அழகிதென்று மறுபிறப்பை நோக்கிற்றோவெனின், அன்று; பிறரது மிடியைக் கருதிற்று, அவனது கைவண்மை-எ - று.

எங்கோ, பேகன்; அவன் கைவண்மை மறுமைநோக்கிற்றன்று; பிறர் வறுமை நோக்கிற்றெனக் கூட்டுக.

‘நின்னினும் புல்லியேமன்' என்பது, 1 ‘பண்டுகாடுமன்' என்பது போல நின்றது. ஒழிந்த மன் : அசைநிலை.


(கு - ரை.) 1 - 2. புறநா. 11 : 11 - 7, குறிப்புரை. 5. புறநா. 150 : 23.

1 ஆக்கப்பொருளில் வந்தது.

7. வினைத்தொகைக்கு இவ்வடி மேற்கோள்; தொல். எச்ச. சூ. 19, ந.8 - 9. பொருந.68

10. உடாஅ - உடுத்திக்கொள்வனவல்ல.

10-12. புறநா.145 : 1 - 3; "கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய, அருந்திற லணங்கி னாவியர் பெருமகன், பெருங்க னாடன் பேகனும்" (சிறுபாண்.85 - 7)

11. படாம் - வஸ்திரம். 12. கடாம் - மதம்.

13-5. புறநா.134; நாலடி.94 ; குறள்,222.

மு. பாணாற்றுப்படைக்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 30, இளம்; சூ. 36, ந.

(141)