144
அருளா யாகலோ கொடிதே யிருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்
காரெதிர் கானம் பாடினே மாக
நீனறு நெய்தலிற் பொலிந்த வுண்கண்
5கலுழ்ந்துவா ரரிப்பனி பூணக நனைப்ப
இனைத லானா ளாக விளையோய்
கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென
யாந்தற் றொழுதனம் வினவக் காந்தள்
முகைபுரை விரலிற் கண்ணீர் துடையா
10யாமவன் கிளைஞரே மல்லேங் கேளினி
எம்போ லொருத்தி நலனயந் தென்றும்
வரூஉ மென்ப வயங்குபுகழ்ப் பேகன்
ஒல்லென வொலிக்குந் தேரொடு
முல்லை வேலி நல்லூ ரானே.

(பி - ம்.) 1 ‘யாதலோ கொடிதேமருள்’ 9 ‘முகைபுணர்’

திணையும் துறையும் அவை.

அவனை அவள்காரணமாகப் பரணர் (பி - ம் வன்பரணர்) பாடியது.

(இ - ள்.) அருள்பண்ணாயாதல் கொடிது; மாலைக்காலம் வந்த அளவிலே சிறிய யாழை இரங்கற்பண்ணாகிய செவ்வழியென்னும் பண்ணிலே வாசிக்கும் பரிசு பண்ணி நினது மழையையேற்றுக்கொண்ட காட்டைப் பாடினேமாக, நீலநறுநெய்தல்போன்று பொலிந்த மையுண்ட கண்கள் கலங்கி வீழ்ந்த 1 இடைவிட்ட துளிகள் பூணையுடைய மார்பை நனைப்ப வருந்துதல் அமையாளாக, 'இளையோய்! கிளைமையையுடையையோ எம்முடைய கேண்மையை விரும்புவோனுக்கு?' என யாங்கள் தன்னை வணங்கிக் கேட்டேமாக, அவள், காந்தள்மொட்டுப்போலும் விரலாலே தன் கண்ணீரைத் துடைத்து, 'நாங்கள் அவனுடைய கிளைஞரேமல்லேம்; கேட்பாயாக, நீ இப்பொழுது : எம்மை ஒப்பாளொருத்தியுடைய அழகைக் காதலித்து எந்நாளும் வருமென்று பலரும் சொல்லுவர், விளங்கிய புகழையுடைய பேகன், ஒல்லெனமுழங்கும் தேருடனே முல்லை வேலியையுடைய நல்லூரின்கண்' என்று கூறினாள்-எ - று.

கிளையையோவென ஓகாரமும், என்றாளென ஒருசொல்லும் வருவித்து உரைக்கப்பட்டன.

நின் கானம் பாடினேமாக, இனைதலானாளாக, யாம் தற்றொழுதனம் வினவ, தன்கண்ணீர் துடைத்துப் பேகன் ஒருத்திநலன் நயந்து நல்லூரின்கண் என்றும் வரூஉமென்பவென்றாள்; அவளை அருளாயாதல் கொடிதெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

எம்போலொருத்தி யென்றது, உவமை கருதாது வன்மையுரை தோன்ற நின்றது; எம்மைப்போலும் பொதுமகளொருத்தியென அவளை இழித்துக் கூறியவாறுமாம்.

இனி, யாம் தற்றொழுதனம் வினவினேமாக, அவள் ஆயத்தார் தம் விரலால் அவள் கண்ணீரைத் துடைத்து யாம் அவன் கிளைஞரேமல்லேம்; இது புகுந்தவாறு யாம் கூறக் கேளென முன்பு கூறிப் பின் பேகன் எம்போலொருத்தி நலன் நயந்து நல்லூரின்கட்சென்று வருமென்று சொன்னார்கள்; இவ்வாறு இளையோளும் ஆயத்தாரும் உறும் துன்புறவு தீர்த்து அருளாயாதல் கொடிதென உரைப்பினும் அமையும்.


(கு - ரை.) 1. ஆகலென்னும் வினைக்குறிப்புச்சொல் சார்ந்து நின்ற சொற்பொருளையே உணர்த்திநிற்றற்கு மேற்கோள்; தொல். இடை. சூ. 32, ந.

2. புறநா. 146 : 3, 147 : 2.

1-2. மாலைக்காலத்திற் செவ்வழி பண்ணல் : புறநா.149 : 2 - 4.

3. புறநா.145 : 13.

னகரவீற்றுச்சொல் வேற்றுமைக்கண் அம்முப்பெற்று நிற்றற்கும் (தொல். குற்றியலுகரப். சூ. 78, .) செயவெனெச்சம் முற்றாய்த் திரிவுழி ஆகவென்னும் இடைச்சொல் வந்து அதன் பொருளையே உணர்த்திச் செயவெனெச்சமாய் நிற்றற்கும் (தொல். இடை. சூ. 32, ந.) மேற்கோள்.

4. "கயவாய நெய்தலலர் கமழ்முகை மணநகை ....... மதருண்கண்" (பரி. 8 : 74 - 5)

6. செயவெனெச்சம் முற்றாய்த்திரிவுழி ஆகவென்னும் இடைச்சொல் வந்து அதன்பொருளையே உணர்த்திச் செயவெனெச்சமாய் நிற்றற்கு மேற்கோள்; தொல். இடை. சூ. 32, .

8-9. "செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்" (சிறுபாண். 167)

14. முல்லை வேலி : "வேலி சுற்றிய வால்வீ முல்லை" (அகநா. 314 : 19); "முல்லை தலையணிந்த முஞ்ஞை வேலி "(பெருங். 4. 2 : 63)

மு. 'அருளா யாகலோ ...... நல்லூரானே: இது கண்ணகி காரணமாக வையாவிக்கோப் பெரும்பேகனைப் பரணர் பாடிய கைக்கிளை வகைப் பாடாண்பாட்டு; கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென வினவ, யாம் கிளையல்லேம், முல்லைவேலி நல்லூர்க்கண்ணே வருமென்று சொல்லுவரெனக் கூறுதலின், அஃது ஏனைக்கைக்கிளைகளின் வேறாயிற்று' (தொல். புறத்திணை. சூ. 35, .)

(144)


1 ‘பூப்போலும் மையுண் கண்கள் தாரையாகச் சொரியாது தனித்து வீழ்கின்ற முத்துப்போலுந் துளியைத் துளிப்ப' (முல்லைப். 23, .)