145
மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்
படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக
பசித்தும் வாரேம் பாரமு மிலமே
5களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி
அறஞ்செய் தீமோ வருள்வெய் யோயென
இஃதியா மிரந்த பரிசிலஃ திருளின்
இனமணி நெடுந்தே ரேறி
10இன்னா துறைவி யரும்படர் களைமே.

திணையும் துறையும் அவை.

அவனை அவள் காரணமாக அவர் பாடியது.

(இ - ள்.) மெல்லிய தகைமையையுடைய கரிய மயில் குளிரால் நடுங்குமென்று அருள்செய்து படாம் கொடுத்த அழியாத நல்ல புகழினை யுடைய மதம்பட்ட யானையையும் மனஞ்செருக்கிய குதிரையையுமுடைய பேக! யாம் பசித்தும் வருவேமல்லேம்; எம்மாற் பரிக்கப்படுஞ் சுற்றமுமுடை யேமல்லேம்; களாப்பழம்போன்ற கரிய கோட்டையுடைய சிறிய யாழை 1இசையின்பத்தை விரும்பியுறைவார் அவ்விசையின்பத்தால் தலையசைத்துக் கொண்டாடும்படி வாசித்து, அறத்தைச் செய்வாயாக அருளை விரும்புவோ யென இது நின்பால் யாம் இரந்த பரிசில்: இற்றையிரவின்கண் இனமாகிய மணியையுடைய உயர்ந்த தேரை ஏறிப்போய்க் காண்டற்கு இன்னாதாக உறைகின்றவள் பொறுத்தற்கரிய நினைவாலுண்டாகிய நோயைத் தீர்ப்பாயாக-எ - று.

பேக! தேரேறி இன்னாதுறைவி அரும்படர் களை; யாழைப் பண்ணி யாம் இரந்த பரிசில் இதுவெனக் கூட்டுக.
இதுவென்றது, அப்படிப் படர் களைதலை.

'மடத்தகை மாமயில் பனிக்குமென்றருளிப், படாஅ மீத்த...... பேக' என்ற கருத்து: இவ்வாறு ஒரு காரணமின்றியும் அருள்பண்ணுகின்ற நீ நின்னால் வருந்துகின்ற இவட்கு அருளாதொழிதல் தகாதென்பதாம்.
இனி, அருள்வெய்யோய்! யாம் இரந்த பரிசில், அறஞ்செய்யவேண்டு மென்று கூறும் இது; அவ்வறந்தான் யாதென்று கேட்பின், நின்பால் அருள்

பெறாமையின் இன்னாதுறைவி அரும்படரை நீசென்று களைதல்; அதனைச் செய்வாயாகவெனக் கூட்டியுரைப்பினும் அமையும்.

'பனிக்குமென்றஞ்சி' என்பதூஉம் பாடம்.


(கு - ரை.) 3. புறநா.141 : 12, 142 : 4.

1-3. புறநா. 141 : 10 - 12.

5. கோடு - யாழுறுப்பினுளொன்று. மு. புறநா.127 : 1; "மருதம் பண்ணிய கருங்கோட்டுச்சீறியாழ்" (மலைபடு. 534)

10. உறைவி: "நோநொந் துறைவி", "நோயுழந் துறைவி" (குறுந்.192 : 2, 400 : 7)

11. முன்னிலைமுன்னர் ஏகாரம் அந்நிலைமரபின் மெய்யூர்ந்து வருதற்கு மேற்கோள்; தொல். எச்ச. சூ. 52, தெய்வச்.

(145)


1 "பண்வனப்புக், கேட்டார் நன்றென்றல்" (சிறுபஞ்ச. 9), "இசைபெறு திருவின் வேத்தவை" (மலைபடு. 39); 'இசையை எக்காலத்தும் கேட்கின்ற செல்வத்தினையுடைய அரசர்களுடைய அவைக்களம்' (மலைபடு. 39, உரை) என்பவை இங்கே அறியற்பாலன்.