341
வேந்துகுறை யுறவுங் கொடாஅ னேந்துகோட்
டம்பூந் தொடலை யணித்தழை யல்குல்
செம்பொறிச் சிலம்பி னிளையோ டந்தை
எழுவிட் டமைத்த திண்ணிலைக் கதவின்
5அரைம ணிஞ்சி நாட்கொடி நுடங்கும்
................................................................................
புலிக்கணத் தன்ன கடுங்கட் சுற்றமொடு
மாற்ற மாறான் மறலிய சினத்தன்
பூக்கோ ளெனவேஎய்க் கயம்புக் கனனே
10விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியற்
சுணங்கணி வனமுலை யவளொடு நாளை
மணம்புகு வைக லாகுத லொன்றோ
ஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பின்
நீளிலை யெஃக மறுத்த வுடம்பொடு
15வாரா வுலகம் புகுத லொன்றெனப்
படைதொட் டனனே குருசி லாயிடைக்
களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்
பெருங்கவி னிழப்பது கொல்லோ
மென்புனல் வைப்பினித் தண்பணை யூரே.

(பி - ம்.) 2 ‘யணிந்ததழை’ 3 ‘னிளையோடாதை’ 5 ‘நுடங்கப’ 9 ‘பூக்கொளெனபகயமபுக’ 10 ‘வயங்கிழைப் பொலிந்தவே...........ா’ 12 ‘வைகலாகுக வொன்றோ’ 14 ‘நேரிலையெஃகம்’ 15 ‘ஓராவுலகம்’ 17 ‘களிறுபொறகலங்கிய மதகயம்’ 18 ‘பெருமகவனிழப்’ 19 ‘மென்புலவைப்பின்’, ‘கணையூர்’

திணையும் துறையும் அவை.

பரணர்.


(கு - ரை.) 1. வேந்து - அரசன். குறையுறவும் - கேட்பவும். கோடு - பக்கம்.

2. தொடலை - மாலை ; "தொடலைக் குறுந்தொடி" (குறள், 1135) தழை : "அணித்தழை நுடங்க வோடி" (புறநா.340 ; 1)

தந்தை (3) கொடான் (1)

4. ‘எழு’ இன்னதென்பது "எழுவுஞ் சீப்பும்" (சிலப். 15 : 215 என்பதன் உரைகளால் அறியப்படும் ; "சீப்புள் ளுறுத்துத் திண்ணெழுப்) போக்கிக், காப்புள் ளுறுத்த கடிமதில் வாயில்" (பெருங். 1. 43 : 163 - 4)

5. அரைமண் இஞ்சி - அரைத்த மண்ணால் அமைக்கப்பட்ட மதில். நாட்கொடி - நல்லநாளிலே கட்டினகொடி ; நாடோறுஞ்செய்த வெற்றிக்குக் கட்டின கொடியுமாம் ; "நாட்கொடி நுடங்கும் வாயில்" (சிலப்.15 : 217 - 8) ; "நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி" (மதுரைக். 368)

7. கடுங்கட்சுற்றம் - வீரச்சுற்றம் ; “வயப்புலி போலத், துஞ்சாக் கண்ணர்" (மதுரைக். 643 - 4), "கொடுவரி கூடிக் குழுஉக்கொண்டனைத்தால்........நிணநிரை வேலார் நிலை", "புலிக்கணமுஞ் சீயமும் போர்க் களிறும் போல்வார்", "குயவரி வேங்கை யனைய - வயவர்" (பு. வெ.9, 25, 58), "மைதோய் வரையி னிழியும் புலிபோல மைந்தன், பெய்தாம மாலைப் பிடியினிழிந் தேகி" (சீவக.2135) என்பவற்றிலும் வீரர்க்குப் புலி உவமிக்கப்பட்டிருத்தல் காண்க.

8. மாற்றம் - மாறுபட்டுச் சொல்லுஞ் சொல். மறலிய - போர் செய்தற் கெழுந்த.

9. போர்க்குரிய பூவை அணிந்துகொண்டு போருக்குப் புறப்படுகவென்று தன் வீரரை ஏவிவிட்டுத் தான் நீராடுதற்குப் பொய்கையின்கட் புகுந்தான் ; போர்செய்தற்குப் புறப்படுமுன் அரசர் நீராடல் மரபு ; புறநா.79 : 1, குறிப்புரை.

10. வேளா - மணஞ்செய்யப்படாத.

14. எஃகம் - வேல்.

15. வாராவுலகம் - வீரசுவர்க்கம்.

12 - 5. ஒன்றோ, ஒன்று ; எண்ணிடைச்சொல் ; புறநா.344 : 4 - 6.
ஊர் (19) கவினிழப்பது கொல்லோ (18)

இச்செய்யுளின் பொருள், நொச்சித்திணைக்கண்ணதாகிய மகண் மறுத்துமொழிதல் என்னுந்துறைக்கும் இடனாகின்றது.

(341)