348
வெண்ணெல் லரிஞர் தண்ணுமை வெரீஇக்
கண்மடற் கொண்ட தீந்தே னிரியக்
கள்ளரிக்குங் குயஞ் சிறுசின்
மீன்சீவும் பாண்சேரி
5வாய்மொழித் தழும்ப னூணூ ரன்ன
குவளை யுண்க ணிவளைத் தாயே
ஈனா ளாயின ளாயி னானாது
நிழறொறு நெடுந்தேர் நிற்ப வயின்றொறும்
செந்நுதல் யானை பிணிப்ப
10வருந்தல மன்னெம் பெருந்துறை மரனே.

(பி - ம்.) 1 ‘வெரீஇப்பக்’ 2 ‘கண்ணககொண்ட’ 3 ‘கள்ளிரிக்குஞசிறுகனவும்’, ‘சிறுமீன்’ 5 ‘தழும்பனூரனன’ 7 ‘ஈனள்’ 10 ‘வருந்தின’

திணையும் துறையும் அவை.

பரணர்.


(கு - ரை) 1, "வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇப், பழனப் பல்புள் ளிரிய" (நற்.350); "வெண்ணெ லரிநர் பின்றைத் ததும்பும், தண்ணுமை வெரீஇய தடந்தா ணாரை", "வெண்ணெ லரிநர் மடிவாய்த் தண்ணுமை, பன்மலர்ப் பொய்கைப் படுபு ளோப்பும்" (அகநா.40 : 13 - 4, 204 : 10 - 11); "வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇச், செங்க ணெருமை யினம்பிரி பொருத்தல்" (மலைபடு.471 - 2)

4. மு. மதுரைக்.269.

5. வாய்மொழி - மெய்ம்மொழி. தழும்பன் : ஓர் உபகாரி; வழு துணைப்பெரும்பெயர்த்தழும்பனென்றும் இவன் வழங்கப்படுவன்; "பெரும்பு, ணேஎர் தழும்ப னூணூ ராங்கண்" (நற்.300 : 9 - 10); "பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன், கடிமதில் வரைப்பினூணூர்" (அகநா. 227 : 17 - 8).

(348)