369
இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பிற்
கருங்கை யானை கொண்மூ வாக
நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த
வாண்மின் னாக வயங்குகடிப் பமைந்த
5குருதிப் பலிய முரசுமுழக் காக
அரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின்
வெவ்விசைப் புரவி வீசுவளி யாக
விசைப்புறு வல்வில் வீங்குநா ணுகைத்த
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
10ஈரச் செறுவயிற் றேரே ராக
விடியல் புக்கு நெடிய நீட்டிநின்
செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சாற்
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
15பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு
கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்
பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்
பாடுநர்க் கிருந்த பீடுடை யாள
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
20வேய்வை காணா விருந்திற் போர்வை
அரிக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப்
பாடி வந்திசிற் பெரும பாடான்
றெழிலி தோயு மிமிழிசை யருவிப்
பொன்னுடை நெடுங்கோட் டிமயத் தன்ன
25ஓடை நுதல வொல்குத லறியாத்
துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா வீகைத் தகைவெய் யோயே.

(பி - ம்.) 1 ‘இரும்பு’ 2 ‘பெருங்கையானை’ 4 ‘படைநத’ 8 ‘ணுதைத்த’ 10 ‘ஈசசசெறுவவியிற்’, ‘ஈசசசெறுவிற்’ 12 ‘செஞசாற்’ 13 ‘வைவேற் கணையொடு’ 14 ‘இருந்தலை சாய்த்த’ 15 ‘வேஎயள்’ 16 ‘கழுகு’ 19 ‘வெணகாள்’ 21 ‘வொறறப்’

திணையும் துறையும் அவை; துறை - ஏர்க்கள உருவகமுமாம்.

சேரமான் கடலோட்டிய வெல்கெழு (பி - ம். வேல்கெழு) குட்டுவனைப் பரணர்.


(கு - ரை.) 1. மு.புறநா.370 : 20. இரும்பு - தந்தப்பூண்; கோளகை : ஆகுபெயர்.

2. கருங்கை - பெரியகை; கருமை : பெருமை ; "பெருங்கையானை" (புறநா. 3 : 11). கொண்மூ - மேகம்.

3. நீண்மொழி - சபதம். மறவர் - வீரர்.

4. வாளாயுதம் மின்னலாக. கடிப்பு - குறுந்தடி.

5. குருதிப் பலிய முரசு - இரத்தமாகிய பலியையுடைய வீரமுரசு; "குருதி வேட்கை யுருகெழு முரசம்" (புறநா.50 : 5, குறிப்புரை)

2-5. "உருமிசை முரச முழக்கென விசைப்பச், செருநவில் வேழங் கொண்மூ வாக" (புறநா.373 : 1 - 2)

6. அரசு அரா - பகையரசர்களாகிய பாம்புகள்.

7. குதிரை காற்றாக; "காலியற் புரவி" (புறநா.178 : 2)

8. வல்வில் : புறநா.152 : 6, குறிப்புரை.

9. கணைத்துளி - அம்பாகிய மழைத்துளி.

1 - 9. "பெரும்படைச் செற்றத் திருங்கடன் மாந்திக், குஞ்சரக் கொண்மூக் குன்றடைந்து குழீஇக், காலிய லிவுளிக் கடுவளி யாட்ட, வேலிடை மிடைந்து வாளிடை மின்னக், கணைத்துளி பொழிந்த கார்வரைச் சாரல்" (பெருங். 3. 27 : 117 - 21)

10. ஈரச்செறுவயின் - ஈரத்தையுடைய போர்க்களமாகிய வயலின் கண்; பு. வெ. 159.

9 - 10. கிடக்கையாகிய வயலில்.

12. படை மிளிர்த்த - ஆயுதமாகிய படைவாளால் கீழ்மேலாக மறிக்கப்பட்ட; "படைமிளிர்ந்திட்ட" (புறநா. 42 : 14) "உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி" (பெரும்பாண்.92) ; படை : சிலேடை. சால் - படைச்சாலில்.

13. கணையம் - கணையமரமென்னும் ஆயுதம். கணையமொடு வேலைவித்தி.

14. கூழ் - பயிர். 15. போர்பு : சிலேடை.

16. கழுகு - பேயில் ஒருசாதி; "கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப" (மதுரைக்.633)

17. பாடுநர்க்கு - பாடிவருபவர்களுக்கு ஈதற்பொருட்டு.

18. தேய்வை வெண்காழ் - சந்தனக்கட்டை. விசி பிணி - விசித்த வார்க்கட்டு.

20. வேய்வை - குற்றம். "வேய்வை போகிய விரலுளர் நரம்பு" (பொருந. 17). விருந்து - புதுமை.

19 - 20. "விசிப்புறுத் தமைத்த புதுக்காழ்ப் போர்வை" (புறநா.399 : 24)

21. அரிக்குரற்றடாரி - அரித்தெழுகின்ற ஓசையையுடைய தடாரிப் பறை; ஒலிநரம்பால் ஓசையையுடைய கிணைப்பறை யென்றுமாம். உருப்ப-சூடு பிறக்க; புறநா.249; 4, குறிப்புரை. "அகன்கட் டடாரி தெளிர்ப்ப வொற்றி", "அரிக்குரற் றடாரி யிரிய வொற்றி" (புறநா.370 : 18, 390 : 7)

22. வந்திசின் : வந்தேன்; "காண்கு வந்திசிற் பெரும", "நிற்காண்கு வந்திசினே", "மன்னெயின் முகவைக்கு வந்திசிற் பெரும" (புறநா. 17 : 33, 125 : 4, 373 : 34) பாடு ஆன்று - ஓசை நிறைந்து.

23 - 3. "பாடான் றிரங்கு மருவி" (புறநா. 124 : 4)

24. "பொற்கோட் டிமயம்" (புறநா.2 : 24, 39 : 14 - 5)

26. துடியடிக் குழவிய பிடி - உடுக்கையின் கண்போன்ற அடியையுடைய கன்றை நீங்காத பெண்யானை; "துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரை" (கலித்.11 : 8)

27. முகவை - ஏற்றுக்கொள்ளும் பரிசில்.

26 - 7. "மன்றுபடு பரிசிலர்க் காணிற் கன்றொடு, கறையடி யானையிரியல் போக்கும்......ஆஅய்", "வரைமருண் முகவைக்கு வந்தனென்", "புகர்முக முகவைக்கு வந்திசின்" (புறநா. 135 : 11 - 3, 370 : 21, 371 : 20); "துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு, பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கென" (பொருந. 125 - 6); "இருபெயர்ப் பேராயமொ, டிலங்குமருப்பிற் களிறுகொடுத்தும்" (மதுரைக். 101 - 2); ‘கன்றும் பிடியுமென்னும் இரண்டு பெயரையுடைய பெரிய திரளுடனே விளங்குகின்ற கொம்பினையுடைய களிறுகளைக் கொடுத்தும்’ (மதுரைக். 101 - 2, ந.)
மு. தொல். புறத்திணை. சூ. 17, இளம்; சூ. 21, ந.; உவம. சூ. 9, இளம். மேற்.

(369)