16
வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்பூட்டி
5மனைமரம் விறகாகக்
கடிதுறைநீர்க் களறுபடீஇ
எல்லுபட விட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப்
புலங்கெட விறுக்கும் வரம்பி றானைத்
10துணைவேண்டாச் செருவென்றிப்
புலவுவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
மயங்குவள்ளை மலராம்பற்
பனிப்பகன்றைக் கனிப்பாகற்
15கரும்பல்லது காடறியாப்
பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை
நாம நல்லமர் செய்ய
ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே.

திணை - வஞ்சி; துறை - மழபுலவஞ்சி.

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப்பாண்டரங்கண்ணனார் பாடியது.

(இ - ள்.) போரிற்கு நன்மையையுடையவாகியவிரைந்த குதிரையுடனே முகில்போலும் நிறத்தையுடையபரிசையைப் பரப்பி, முனையிடங் கலங்க மேற்சென்று,அவரது நெல்விளைகழனியைக் கொள்ளையூட்டி, மனையிடத்துமரமே விறகாகக் காவற் பொய்கைகளின் நீரிலேகளிற்றைப் படிவித்து, விளக்கமுண்டாக இடப்பட்டநாடுசுடுநெருப்பினது ஒளிதான் விடுகின்ற கதிரையுடையஞாயிற்றினது செக்கர்நிறம் போலத் தோன்ற இடமில்லையாகச்சென்று விடும் எல்லையில்லாத படையினையும், துணைப்படைவேண்டாத போர்வெற்றியினையும், புலால்நாறும்வாளினையும் பூசிப்புலர்ந்த சாந்தினையும், முருகனதுவெகுட்சிபோலும் வெகுட்சியினையுமுடைய உட்குப்பொருந்தியதலைவ! ஒன்றோடொன்று கலந்த வள்ளையையும் மலர்ந்தஆம்பலையும் குளிர்ச்சியையுடைய பகன்றையையும் பழத்தையுடையபாகலையும் உடைத்தாகிய கரும்பல்லது பிறிதுகாடறியாதபெரிய மருதம் பாழாகக் காவலையுடைய நல்ல நாட்டைஒள்ளிய தீயை ஊட்டி அஞ்சத்தக்க நல்ல போரைச்செய்ய, நின்கருத்திற்கேற்ப ஒரு பெற்றிப்படப்பொருதன, பெரும! நின்னுடைய களிறுகள் - எ - று.

தோல்பரப்பி (2) என்பது முதலாகியவினையெச்சங்களை இறுக்கும் (9) என்னும் பெயரெச்சவினையொடுமுடித்து,அதனைத் தானை (9) என்னும் பெயரோடு முடிக்க.பாகற் (14) றண்பணை (16) என இயையும். எல்லுப்பட இட்டசுடுதீ (7) என்றதனைத் தானைக்கு அடையாக்குக.

கவர்பூட்டி (4) என்பதற்குவிரும்பிக் கொள்ளையூட்டியெனவும், புலங்கெட (9) என்பதற்குநாடழியவெனவும், புலவுவாள் (11) என்பதற்குப்புலாலுடைய வாளெனவும் உரைப்பினும் அமையும்.

குருசில்! பெரும! நீ அமர்செய்ய,நின் களிறு ஓராங்குமலைந்தனவென வினைமுடிவுசெய்க.

பாகல் : பலாவென்று உரைப்பாருமுளர்.

ஏம நன்னாடு ஒள்ளெரியூட்டி யென்றதனால்,இது மழபுலவஞ்சி யாயிற்று.


(கு - ரை.) 2. கேடகத்திற்கு மேகம்உவமை : புறநா. 17 : 34; “மன்ன ரெயிலூர் பஃறோல்போலச், சென்மழை” (நற். 197 : 10 - 12); “மழையெனமருளு மாயிரும் பஃறோல்” (பதிற். 62 : 2); “மழைமருள்பஃறோல்” (மலைபடு. 377)

4. புறநா. 57 : 6 6. புறநா. 15 : 8- 10.

10. “கூட்டொரு வரையும் வேண்டாக்கொற்றவ” (கம்ப. வாலிவதை. 81) “துணைவேண்டாச்செருவென்றி நாடகவழக்கு” (தொல்.புறத்திணை. சூ. 8, ந.)

9 - 10. “மன்னர், உவப்ப வழிபட்டொழுகினுஞ் செல்வம், தொகற்பால போழ்தே தொகும்”(பழ. 120); “ஊக்க முரண்மிகுதியொன்றிய நற்சூழ்ச்சி,யாக்க மவன்க ணகலாவால் - வீக்க, நகப்படாவென்றிநலமிகு தாராற், ககப்படா வில்லை யரண்” (பு. வெ.100)

12. மு. பொருந. 131; “முருக னன்னசீற்றத்து” (அகநா. 158)

14. பகன்றை - சிவதை; குறிஞ்சிப்88; ஐங்குறு. 456; கலித். 73.

15 - 6. “கரும்பலாற் காடொன்றில்லாக் கழனி” (சீவக. 2902)

16 - 7. புறநா. 6 : 21 - 2, 7 : 7 - 8, 23 :10 - 11; “இழிபறியாப் பெருந்தண்பணை, குரூஉக்கொடியவெரிமேய, நாடெனும்பேர் காடாக.... பாழாயினநின்பகைவர் தேஎம்” (மதுரைக். 154 - 76); கலித்.13 : 1 - 2.

இப்பாட்டினை, எரிபரந்தெடுத்தலென்னும்துறைக்கு உதாரணமாகக் காட்டுவர்; தொல்.புறத்திணை. சூ. 7, இளம்.; சூ. 8, ந. (16)