183
உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
5ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
10மேற்பா லொருவனு மவன்கட் படுமே.

திணையும் துறையும் அவை.

பாண்டியன் ஆரியப்படை கடந்த (பி - ம். தந்த) நெடுஞ்செழியன்பாட்டு.

(இ - ள்.) தன்னாசிரியற்கு (பி- ம். தம்மாசிரியர்க்கு) ஓரூறுபாடு உற்றவிடத்து அதுதீர்த்தற்கு வந்து உதவியும் மிக்க பொருளைக் கொடுத்தும்வழிபாட்டுநிலைமையை வெறாது கற்றல் ஒருவற்கு அழகிது;அதற்கு என்னோ காரணமெனின்: பிறப்பு ஒரு தன்மையாகியஒருவயிற்றுப்பிறந் தோருள்ளும் கல்வி விசேடத்தால்தாயும் மனம் வேறுபடும்; ஒருகுடியின் கட்பிறந்தபலருள்ளும் மூத்தோன் வருகவென்னாது அவருள் அறிவுடையோன் சென்ற நெறியே அரசனும் செல்லும்; வேறுபாடுதெரியப்பட்ட நாற்குலத்துள்ளும் கீழ்க்குலத்துள்ஒருவன் கற்பின் மேற்குலத்துள் ஒருவனும் இவன் கீழ்க்குலத்தானென்றுபாராது கல்விப் பொருட்டு அவனிடத்தே சென்று வழிபடுவனாதலான்-எ- று.


(கு - ரை.) 2. குறள், 395, பரிமேல்.உரைநடை.

5 - 6. “ஒருகுடியிற், கல்லாது மூத்தானைக்கைவிடுபு கற்றா, னிளமைபா ராட்டு முலகு” (நான்மணி.65)

7. “அறிவுடை யொருவனை யரசனும்விரும்பும்” (வெற்றி வேற்கை)

8 - 10. “தோணி யியக்குவான் றொல்லைவருணத்துக், காணிற் கடைப்பட்டா னென்றிகழார் -காணா, யவன்றுணையா வாறுபோ யற்றே நூல் கற்ற, மகன்றுணையாநல்ல கொளல்” (நாலடி. 136)

‘வேற்றுமை....படுமே : இது வேதமொழிந்தகல்வியோதல் கூறிற்று” (தொல். புறத்திணை.சூ. 16, இளம்.)

மு. “சிறப்பின் பாலார் மக்களல்லார், மறப்பின் பாலார் மன்னர்க்கு” (மணி.23 : 31 - 2)

‘உற்றுழி....படுமே : இது வேளாளர்ஓதலின் சிறப்புக் கூறியது’ (தொல்.புறத்திணை. சூ. 20, ந.)

(183)