1
கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பிற் றாருங் கொன்றை
ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியு மவ்வே றென்ப
5கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை
மறைநவி லந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத்
தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்
பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை
10பதினெண் கணனு மேத்தவும் படுமே
எல்லா வுயிர்க்கு மேம மாகிய
நீரற வறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே.

கடவுள் வாழ்த்து.
பாரதம்பாடிய பெருந்தேவனார் பாடியது.

இதன் பொருள் - திருமுடிமேற் சூடப்படுங்(பி - ம்.. சூட்டிய) கண்ணி கார்காலத்து மலரும் நறியகொன்றைப்பூ; அழகிய நிறத்தையுடைய திருமார்பின்மாலையும் அக் கொன்றைப்பூ; ஏறப்படுவது தூய வெளியஆனேறு; மிக்க பெருமை பொருந்திய கொடியும் அவ்வானேறென்றுசொல்லுவர்; நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தலும்செய்தது; அக்கறுப்பு, தான் மறுவாயும் வானோரை உய்யக்கொண்டமையின்,வேதத்தைப் பயிலும் அந்தணராற் புகழவும்படும்; பெண்வடிவு ஒருபக்கமாயிற்று; ஆய அவ்வடிவுதான், தன்னுள்ளேஒடுக்கி மறைக்கினும்

மறைக்கப்படும்; பிறை, திருநுதற்கு(பி - ம். திருநுதலது) அழகாயது. அப்பிறைதான் பெரியோன்சூடுதலால், பதினெண் கணங்களாலும் புகழவும்படும்; எவ்வகைப்பட்டஉயிர்களுக்கும் காவலாகிய, நீர் தொலைவறியாக் குண்டிகையானும்தாழ்ந்த திருச்சடையானும் சிறந்த செய்தற்கரியதவத்தையுடையோனுக்கு - என்றவாறு.

தன்னுளடக்கிக் கரக்கினும் கரக்குமென்பதற்கு அவ்வடிவுதான்எல்லாப் பொருளையும் தன்னுள்ளேயடக்கி அவ்விறைவன்கூற்றிலே மறையினும் மறையுமென்று உரைப்பினும்அமையும்.

நீரறவறியாக் கரகம் - கங்கையென்பாருமுளர்.

அக்கறை, அவ்வுரு, அப்பிறை என நின்றஎழுவாய்கட்கு நுவலவும்படும், கரக்கினுங்கரக்கும்,ஏத்தவும்படும் என நின்ற பயனிலைகளை நிரலேகொடுக்க. இவ்வெழுவாய்களையும் பிறவற்றையும் அருந்தவத்தோற்கென்னும்நான்காவதனோடு முடிக்க.

ஏமமாகிய (11) அருந்தவத்தோ (13) னென்க;1 ஏமமாகிய நீரெனினும் அமையும்.

அணியலுமணிந்தன்றென்பது, “உண்ணலு முண்ணேன்” (கலித்.23) என்பது போல நின்றது.

பதினெண்கணங்களாவார் : தேவரும் அசுரரும் முனிவரும்கின்னரரும் கிம்புருடரும் கருடரும் இயக்கரும் இராக்கதரும்கந்தருவரும் சித்தரும் சாரணரும் வித்தியாதரரும் நாகரும்பூதமும் வேதாளமும் தாராகணமும் ஆகாசவாசிகளும் போகபூமியோருமென இவர்; 2 பிறவாறும் உரைப்பர்.

இப்பெரியோனை மனமொழி மெய்களான்வணங்க அறமுதல் நான்கும் பயக்கு மென்பது கருத்தாகக்கொள்க.


(குறிப்புரை) 1. கண்ணி - ஆடவர் தலையிற்சூடுதற்குரிய மாலை; “பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்”(முருகு. 44); கார் நறுங் கொன்றை: “காரினார் மலர்க்கொன்றைதாங்கு கடவுள்”, “கார்க் கொன்றை மாலை கலந்ததுண்டோ” (தே.) ; கொன்றைமாலை சிவபெருமானதுஅடையாள மாலை என்பர்; கலித். 150 : 1.; சீவக. 208, ந.

2. தார் - மார்பிலணியுமாலை; “மார்பொடு விளங்கவொருகை, தாரொடு பொலிய வொருகை” (முருகு. 112 - 3);“பொலந்தார் மார்பினெடியோன்” (மதுரைக்.61); “புனைதார்ப் பொலிந்த வண்டுபடுமார்பின்”(மலைபடு. 56)

1 - 2. “கார்விரி, கொன்றைப்பொன்னேர் புதுமலர்த், தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்”(அகநா. கடவுள்.)

3. “ஒன்றானுங் குறைவில்லை யூர்திவெள்ளேறு”(தே.); “வால் வெண் சுண்ணம்” (மணி. 4 : 18); “வால்வெண்டோடு - இளைய வெள்ளிய தோடெனினுமமையும்; ‘ஊர்திவால்வெள்ளேறே‘(சிலப். 16 : 35, அடியார்.) என்றாராகலின்”

1 - 3. “கண்ணி.....ஏறே யென்புழிக் கொன்றையையும்ஏற்றையும் இடைவந்த சொற்கள் விசேடித்து வந்தன”(தொல். எச்ச. சூ. 59, ந.)

3 - 4. புறநா. 56 : 1 - 2.

5. “இயங்கலு மியங்கு மயங்கலுமயங்கும்” (சிலப். 22 : 154); “சுழலலுஞ் சுழலுமோடலு மோடும்........நீடலு நீடும்”, “தமபெரும்பற்று நீங்கலு நீங்கார்” (மணி. 3 : 111 - 3, 8 : 57);“முரிமுரிந்தவென்பதனை, ‘அணியலு மணிந்தன்று’என்றாற்போலக் கொள்க” (சீவக. 2310, ந.); “கறைமிடறணியலு மணிந்தன்றென்புழிக் கறைமிடற்றை அழகு பெறுதலையுஞ்செய்ததென.........முழுதும் காரியவாசகமாயே நின்றவாறுகாண்க” (தொல். வேற்றுமைமயங்கு. சூ. 29, ந.); வேற்றுமைக்கண்றகரம் மிகாமைக்கு இவ்வடி மேற்கோள் (நன். மயிலை.சூ. 182; நன். வி. சூ. 183; இ - வி. சூ. 102, உரை); “விடமும்வந் தீசன் கோல மிடற்றினினீல வண்ண, வடிவுபெற்றணிய தாகி வயங்கிற்றுப் பெரிது மென்றால்,கொடியரும் பெருமை யோரைக் கூடின்வெங் கோது நீங்கி,ஒடிவறு நலம்பெற் றுய்த லுரைப்பதெ னுலகி னம்மா”(பாகவதம், 8 : கடல்கடைந்த. 24); “அணியலுமணிந்தன்று;ஒரு பொருட் பன்மொழி” (நன். மயிலை. சூ. 397); கறைமறுவெனப்படுதல்: “விண்ணினார் புகழ்தற் கொத்தவிழுமியோ னெற்றி போழ்ந்த, கண்ணினான் கண்டந்தன்மேற் கறையையார் கறையன் றென்பார்” (குண்டல.);“பாவகத்தைப் பாவித்தலென்பது, ‘கறைமிட றணியலுமணிந்தன்று‘ என்றது போலக் கொள்க” (சிவஞானபோதம்,பொதுவியல்பு, சூ. 6, மேற்.); கறை அழகு செய்யு மென்பதை,“கடுக்கவின்பெறு கண்டனும்” (திருவிளை. நகரப்.)என்பதனால் உணர்க.

6. நவிலல் - கூறியடிப்படல்; “நாவிடைநன்னூ னன்கன நவிற்றி” (மணி. 13 : 24)

9. (புறநா. 55 : 4 - 5); “பிறைநெற்றியோடுற்ற முக்கண்ணினார்”, “பிறை தாங்கு நெற்றியர்”,“பிறைசேர் நுதலிடைக் கண்ணமர்ந் தவனே” (தே.)

7 - 9. ஆகின்று - ஆயிற்று; புறநா. 148 :7.

10. பதினெண்கணன் : “ஒன்பதிற்றிரட்டி யுயர்நிலை பெறீஇயர்” (முருகு. 168)

9 - 10. பிறை தொழுதேத்தப்படுதல்:“தொழுதுகாண் பிறையிற்றோன்றி” (குறுந். 178);“ஒள்ளிழை மகளி ருயர்பிறை தொழூஉம், புல்லென்மாலை” (அகநா. 239); “குழவித் திங்க ளிமையவ ரேத்த,அழகொடு முடித்த வருமைத்து” (சிலப். 2 : 38 - 9); “அப்பிறை,பதினெண் கணனு மேத்தவும் படுமே யென்றார் புறப்பாட்டினும்”(சிலப். 2 : 38 - 9, அடியார்.); வி. பா. குருகுலச். 6.

11 - 2. ஆசிரியப்பாவில் ஈற்றயலடிமுச்சீர்த்தாய் வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; தொல்.செய். சூ. 68, பேர்.

13. அருந்தவத்தோன் : “அருந்தவமுதல்வன்” (கலித். 100 : 7); “நற்றவனைப் புற்றரவநாணி னானை”, “நற்றவனை நான்மறைகளாயி னானை”,“நற்றவாவுனை நான்மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே”,“நற்றவன் காண்”, “மாதொர் கூறுடை நற்றவனை”(தே.); “அருந்தவ னதிசயித்து” (திருவால. 61 : 6).


1. ‘ஏமமாகிய நீர்’ என்றது “நீரின்றமையாதுலகு”(குறள், 20) என்பது கருதி.

2. முருகு. 168, ந.; பிங்கலம், 92; தக்க.136, உரை.