176
ஓரை யாயத் தொண்டொடி மகளிர்
கேழ லுழுத விருஞ்சேறு கிளைப்பின்
யாமை யீன்ற புலவுநாறு முட்டையைத்
தேனா றாம்பற் கிழங்கொடு பெறூஉம்
5இழுமென வொலிக்கும் புனலம் புதவிற்
பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
உடையை வாழியெற் புணர்ந்த பாலே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
10ஓரூ ருண்மையி னிகழ்தோர் போலக்
காணாது கழிந்த வைகல் காணா
வழிநாட் கிரங்குமென் னெஞ்சமவன்
கழிமென் சாயல் காண்டொறு நினைந்தே.

திணையும் துறையும் அவை.

1 ஓய்மான் நல்லியக்கோடனைப் புறத்திணைநன்னாகனார் பாடியது.

(இ - ள்.) .-விளையாட்டுத் திரட்சிக்கண்ஒள்ளிய வளையையுடைய மகளிர் கேழற்பன்றியுழுத கரியசேற்றைக் கிளறின், அதன் கண்ணே ஆமையீனப்பட்டபுலால் நாறும் முட்டையைத் தேன் நாறும் ஆம்பலினதுகிழங்குடனே பெறும் இழுமென்னும் அனுகரணமுண்டாக முழங்கும்நீர்வழங்கும் வாய்த்தலைகளையுடைய பெரிய மாவிலங்கையென்னும் ஊர்க்குத் தலைவன், சிறிய யாழையுடைய வறியோர்தொடுக்கும் புகழ் மாலைசூடும் நல்லியக்கோடனைத் துணையாகநீ யுடையையாதலான், என்னைப் பொருந்திய விதியே!நீ ஒரு குறையுடையையல்லை, வாழ்வாயாக; பாரியது பறம்பின்கட்குளிர்ச்சியையுடைய சுனையிடத்துத் தெளிந்த நீர்போய்த்தேடிக்கொள்ள வேண்டாமல் ஓரூரின்கண்ணேயுண்டாதலின்அதனை யாம் வேண்டியபொழுது உண்கின்றோமென்று நெகிழ்ந்திருந்தாரையொப்பஅவனைக் காணாதொழிந்த நாட்கள் 2 எனக்குநாட்களாய்க் கழிந்தனவல்ல வென்று உட்கொண்டு அவனோடுதொடர்ந்த3 நட்பு இன்றே போல இடையறாதுசெல்லவேண்டுமென்றுபின்வருநாளைக்கு இரங்காநின்றது என்னுடைய நெஞ்சம்,அவனது மிக்க மெல்லிய சாயலைக் காணுந்தோறும் நினைந்து-எ- று.

என்னெஞ்சம் அவன்சாயலைக்காணுந்தோறும் நினைந்து வழிநாட் கிரங்கும்; என்னைப்புணர்ந்தவிதியே! நீ நல்லியக்கோடனை உடையை யாதலால்,நீ என்ன குறையையுடையை; நீ வாழ்வாயாகவெனக்கூட்டிவினைமுடிவு செய்க.

‘இல்லோர்சொன்மலை’ என்பதற்குஇல்லோர்சொல்லைச் சூடு மென்றும், ‘எற்புணர்த்தபாலே’என்றோதி என்னை அவனோடு கூட்டிய விதியேயென்றும்,‘வழிநாட்கிரங்கும்’ என்பதற்கு இன்னும் இவனொடுதொடர்ந்த நட்பு இடையற்றுக் கழியுங்கொலென்றுஇரங்குமென்றும் உரைப்பாரும் உளர்.


(கு - ரை.) 1. ஓரை - மகளிர்விளையாட்டு; “விளையா டாயமொ டோரை யாடாது”(நற். 68); “ஓரை யாயங் கூற’‘, “ஓரை மகளிர்”(குறுந். 48, 316, 401)

3. ஆமைமுட்டை: “நிறைச்சூலியாமை மறைத்தீன்று புதைத்த, கோட்டுவட் டுருவின்புலவுநாறு முட்டை” (அகநா. 160)

5. “புனலம் புதவின் மிழலை” (புறநா.24 : 19). புதவு - கதவு; ஆகுபெயர்.

6. “நெல்லமல் புரவி னிலங்கைகிழவோன்” (புறநா. 379 : 6)

7. “இல்லோர் செம்மல்” (சிலப்.15 : 90); “அறிந்தோர் சொன்மலை” (முருகு. 263)

6 - 7. “நன்மா விலங்கை மன்னருள்ளும்...பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை, நல்லியக்கோடனை”, “செல்லிசை நிலைஇய பண்பி னல்லியக்கோடனை” (சிறுபாண். 120 - 26, 268 - 9)

8. “நல்லைமன் றம்ம பாலே” (குறுந்.229)

9. மு. புறநா. 337 : 6.

9 - 10. “இனியே, பாரி பறம்பிற்பனிச்சுனைத் தெண்ணீர், தைஇத் திங்கட் டண்ணியதரினும், வெய்ய வுவர்க்கு மென்றனிர்” (குறுந்.196)

11 - 2. செய்யாவென்னும்வாய்பாட்டுவினையெச்சம் வினைமுதலும் இறந்தகாலமும்தழுவிவந்ததற்கு மேற்கோள்; (நன். சூ. 343, மயிலை.)

13. சாயல் ஆண்பாலார்க்கும் கூறப்படுதல்,“நீரினு மினிய சாயற், பாரிவேள்” (புறநா.105) என்பதனாலும் அதன் குறிப்பாலும் உணரலாகும்.

(176)


1 இவன், பத்துப்பாட்டிலுள்ள சிறுபாணாற்றுப்படைத்தலைவன்.

2 புறநா. 65 : 12.

3 “இன்றே போல்கநும்புணர்ச்சி” (புறநா. 58 : 28)