376
விசும்பு நீத்த மிறந்த ஞாயிற்றுப்
பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங் கந்தி
சிறுநனி பிறந்த பின்றைச் செறிபிணிச்
சிதாஅர் வள்பினென் றெடாரி தழீஇப்
5பாண ராரு மளவை யான்றன்
யாணர் நன்மனைக் கூட்டுமுத னின்றனென்
இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரெனக்
குணக்கெழு திங்கள் கனையிரு ளகற்றப்
பண்டறி வாரா வுருவோ டென்னரைத்
10தொன்றுபடு துளையொடு பருவிழை போகி
நைந்துகரை பறைந்தவென் னுடையு நோக்கி
விருந்தின னளிய னிவனெனப் பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி நன்றும்
அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு
15நிரயத் தன்னவென் வறன்களைந் தன்றே
இரவி னானே யீத்தோ னெந்தை
அன்றை ஞான்றினொ டின்றி னூங்கும்
இரப்பச் சிந்தியே னிரப்படு புணையின்
உளத்தி னளக்கு மிளிர்ந்த தகையேன்
20நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி
ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை
ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
தோன்றல் செல்லாதென் சிறுகிணைக் குரலே.

(பி - ம்.) 1 ‘விசும்பினீத்தமிறந்த’, ‘விசும்பிணியத்தமிறந்த’ 2 ‘மழுங்கிய’, ‘பழுனிய’, ‘மழகிய’, 2 - 3 ‘கந்திச் சிறுநனியிறந்த’ 4 ‘சிதாஅவளபின்’ 6 ‘பாணர்நன்.................நினறென’ 8 ‘மறையிருள்’ 10 ’போக்கி’ 13 ’மூரற்கை மிக்குநன்று’ 15 ‘வறங்’ 17 ‘நான்றினொடு’

திணை - அது; துறை - இயன்மொழி.

ஓய்மான் நல்லியாதனைப் (பி - ம். ஆய்மானல், ஓய்மான்
வில்லியாதனைப், ‘ஓய்மான் நல்லியக் கோடனை’)ப் புறத்திணை நன்னாகனார்.


(கு - ரை.) 1. விசும்பு நீத்தம் - விசும்பாகிய நீத்தத்தை ; ‘நீத்தம்’ என்றார் கடத்தற்கு அருமையின். இறந்த - கடந்த.

2. மழுகிய - ஒளி குறைந்த. அந்தி - மாலைக்காலம்.

1 - 2. “சுடர்கெழு மண்டில மழுக ஞாயிறு, குடகடல் சேரும் படர்கூர் மாலை” (அகநா. 378 ; 14 - 5)

4. தெடாரி ; மோனைநோக்கி எகரமாயிற்று ; புறநா. 368 : 15. “சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி” (புறநா. 381 : 12)

5. ஆரும் - உண்ணும்.

6. யாணர் நன்மனை - புதுவருவாயை யுடைய நல்ல வீடு. கூட்டு முதல் - தானியக் கூட்டின் அடியில் ; (புறநா.396 : 19)

7. இமைத்தோர் - இமைகொட்டுவோர். மாத்திரை - அளவு. ஞெரேரென - விரைவாக. 8. குணக்கு - கிழக்கு. கனை - செறிவு.

9. “மாலை யன்னதோர் புன்மையுங் காலைக், கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையும்” (பொருந. 96 - 7). 10. பருஇழை - பரிய நூலிழை.

11. பறைந்த - தேய்ந்த ; புறநா. 359 ; 1.

9 - 11. “அரையது, வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர், ஓம்பி யுடுத்த வுயவற் பாண”, “கூதிர்ப் பருந்தி னிருஞ்சிற கன்ன, பாறிய சிதாரேன்” (புறநா. 69 : 2 - 4, 150 ; 1 - 2) ; ஈரும் பேனு மிருந்திறை கூடி, வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த, துன்னற் சிதாஅர்”, “பாசி வேரின் மாசொடு குறைந்த, துன்னற் சிதாஅர்” (பொருந. 79 - 81, 153 - 4)

13. முரற்கை - தாளம் ; எங்களைப் பாடாதவாறு செய்தென்றபடி.

14. புறநா. 392 ; 16 ; “பாப்புக் கடுப்பன்ன தோப்பி” (அகநா. 348 : 7); “பாம்புவெகுண் டன்ன தேறல்” (சிறுபாண். 237). சூடு - சூட்டிறைச்சி ; புறநா. 34, 369, 395, 397.

15. நிரயத்தன்ன வறன் - நரகவேதனை போன்ற துன்பத்தைச் செய்விக்கும் வறுமை.

17 - 8. “இலனென்னு மெவ்வ முரையாமை யீதல், குலனுடையான் கண்ணே யுள” (குறள், 223) என்பதையும் அதற்குப் பரிமேலழகர் எழுதிய விசேடவுரையையும், விநாயக புராணம், அரசியற்கைப்படலம், 38 - ஆம் பாடல் முதலியவற்றையும் பார்க்க. நிரப்படுபுணை - வறுமையைக் கடத்தற்குரிய தெப்பம்.

20. நிறைக்குளப்புதவு - நீர்நிறைந்திருத்தலையுடைய குளத்தின் வாய்த்தலை ; புறநா.24 : 19.

21. இரவலர் வரையா - யாசகரை நீக்காத. வள்ளியோர் - வரையாது கொடுப்போர். கடைத்தலை - தலைவாயில்.

22. ஞாங்கர் - பக்கம். நெடுமொழி - தனது மேம்பாட்டைக் கூறுமொழி.

18 - 23. இவ்வடிகளின் பொருள், "செருமான வேற்சென்னி தென்னுறந்தை யார்தம், பெருமான் முகம்பார்த்த பின்னர் - ஒருநாளும், பூதலத்தோர் தம்மைப் பொருணசையாற் பாராவாம், காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்" (தண்டி. சூ. 21, உரை, மேற்.) என்னும் வெண்பாவை நினைப்பிக்கின்றது.

மு. புறநா. 68 : 19, 148.

(376)