246
பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட
5காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
10உயவற் பெண்டிரே மல்லே மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம்
நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற
வள்ளித ழவிழ்ந்த தாமரை
15நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே.

(பி - ம்.) 4 ‘வாள்போந்தட்ட’,‘வாள்போழ்ந்தட்ட’ 6 ‘தடகிடை மிடைந்த’, ‘தடைகிடந்த’

திணை - அது; துறை - ஆனந்தப்பையுள்.

பூதபாண்டியன்றேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள்சொல்லியது.

ஆனந்தப்பையுளாவது:-
“விழுமங் கூர வேய்த்தோ ளரிவை
கொழுநன் வீயக் குழைந்துயங் கின்று” (பு. வெ. 266)

(இ - ள்.) பலசான்றவிரே!பலசான்றவிரே! நின் தலைவனோடு இறப்ப நீ போவென்றுகூறாது அதனைத் தவிர்கவென்று சொல்லி விலக்கும்பொல்லாத விசாரத்தையுடைய பலசான்றவிரே! அணிலினது
வரிபோலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காயைஅரிவாளால் அரிந்திடப்பட்ட விதைபோன்ற நல்லவெள்ளிய நறிய நெய்தீண்டாமல இலை இடையே பயின்றகையாற் பிழிந்து கொள்ளப்பட்ட நீர்ச்சோற்றுத்திரளுடனே வெள்ளிய எள்ளரைத்த விழுதுடனே புளிகூட்டிஅடப்பட்ட வேளையில் வெந்த வேவையுமாகிய இவை உணவாகக்கொண்டு பருக்கைகளாற் படுக்கப்பட்ட படுக்கையின்கண்பாயும் இன்றிக் கிடக்கும் கைம்மைநோன்பால்வருந்தும் பெண்டிருள்ளேமல்லேம் யாம்; புறங்காட்டிகண்உண்டாக்கப்பட்ட கரிய 1 முருட்டால் அடுக்கப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்கு அரிதாவதாகுக; எமக்கு எம்முடையபெரிய தோளையுடையனாகிய கொழுநன் இறந்துபட்டானாக, முகையில்லையாக வளவிய இதழ்மலர்ந்த தாமரையையுடையநீர்செறிந்த பெரிய பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து - எ - று.

தில் : விழைவின்கண் வந்தது,

எமக்கு பொய்கையும்தீயும் ஒருதன்மைத்து; நுமக்கு அரிதாகுகவெனக் கூட்டுக,


(கு - ரை.) 1. நன். சூ. 169, மயிலை.மேற்.

4. ‘ அணில்வரிக் கொடுங்காய்எனப் புறத்தினுங் காட்டினராதலின், கொடுங்காயென்பதுபெயர்; வரி - அடை’ ( சிலப். 16 : 22 - 8, அடியார்.);குறில் செறியா ளகரம் வேற்றுமையில் வலிமுன்திரியாது இயல்பானதற்கு மேற்கோள்; நன். சூ.228, b; நன். வி. சூ. 229; இ. வி. சூ. 139, உரை.

8. “கலந்தவனைக் கூற்றங் கரப்பக்கழியா, தலந்தினையுமவ்வளைத் தோளி-உலந்தவன், தாரொடுபொங்கி நிலனசைஇத் தான்மிசையும், காரடகின் மேல்வைத்தாள்கை “ (பு. வெ. 257)

7-9. ‘துன்புறுவன என்றார், வெள்ளெட்சாந்தொடு........வதியும்: என்பதனை; இது புறம்‘ (சிலப்.18 : 34 - 6, அடியார்.)

11-5. தொல். இடை . சூ. 5, தெய்வச்.மேற்.

7 - 15. “காதல ரிறப்பிற் கனையெரிபொத்தி, ஊதுலைக் குருகினுயிர்த்தகத் தடங்கா,தின்னுயி ரீவ ரீயா ராயின், நன்னீர்ப் பொய்கையினளியெரிபுகுவர், நளியெரி புகாஅ ராயி னன்பரோ, டுடனுறைவாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்” (மணி. 2 : 42 -7)

மு. காஞ்சித்திணைத்துறைகளுள்,‘நல்லோள் கணவனொடு நளியழல் புகீஇச், சொல்லிடையிட்ட மாலைநிலை’ என்பதற்கு மேற்கோள்;

தொல். புறத்திணை. சூ. 19, இளம்.;சூ. 24, ந.

(246)


1 “வன்ப ராய்முரு டொக்குமென்சிந்தை” (திருவா.).