(பி - ம்.) 10 ‘உள்ளியது செய்தோய்’ 22 ‘மனைத்தொலைஇந்திருந்த’ திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது, (இ - ள்.) அஞ்சத்தக்க முறைமையையுடைய வெய்ய சினத்தையுடைய மழையின்கண் உள்ள இடியேறு, அச்சமுடைய பாம்பினது அணுகுதற்கரிய தலை துணிய, நிலவகலத்தை நின்றுபார்ப்பதுபோன்ற நீண்டமலை பிறழச் சிறுமலைதூவ எறியும் ஓசைபோல வீரமுரசு கிளர்ந்தொலிக்கும் படையுடனே மேற்சென்று வேந்தர் பட எதிர் நின்றுகொல்லும் புகழமைந்த தலைவ! நீ வள்ளியையாதலால் எமக்குத் தாழ்ந்து பரிசில் நல்குவன் இவனென்று நின்னைநினைந்துவந்த உயர்ந்த நிலைமையையுடைய பரிசிலேனாகிய யான் நினக்கு எம்மை எதிரேற்றுக்கொள்ளா மாந்தரது கொடுமையைச் சொல்லவும் நின்னுடைய நினைவேசெய்தாய், நிச்சயமாக; முன்னைநாட் பரிசில் கையிலே புகுந்ததுபோலக் காட்டிப் பிற்றைநாட் பொய்யைப் பெற்றுநின்ற நினது புறநிலைமைக்கு யான்வருந்திய வருத்தத்திற்கு நீதான் நாணாயாயினும் நீ நாணச் சொல்லி எனது நுண்ணிய ஆராய்ச்சியையுடைய செவ்விய நா வருந்தப் புகழ்ந்து நாடோறும் பாடப் பாடப் பின்னரும் பாடவேண்டும் புகழை ஏற்றுக்கொண்ட நினது வென்றி பொருந்திய அகன்றமார்பை வணங்கி வாழ்த்திப் போவேன் யான்; நாடோறும் உணவில்லாமையான் இடந்தோறும் இடந்தோறும் மாறிமாறி அகழ்தலால் இல்லெலி மடிந்த பழையசுவராகிய எல்லையையுடைய, பாலில்லாமையாற் பலபடி சுவைத்து முலையுண்டலை வெறுத்த பிள்ளையுடனே மனையின்கண்ணே வறுமையுற்றிருந்த என்னுடைய ஒளிபொருந்திய நுதலையுடையாளை நினைந்து-எ - று. தோன்றல்! நின் உள்ளி வந்த பரிசிலேனாகிய நான் கூற, நின் உள்ளியது செய்தாயாதலான் வருத்தங் கூறி ஏத்தித் தொழுதனென் பழிச்சி வரைப்பின் மனைக்கண்ணே புதல்வனொடு தொலைந்திருந்த என் வாணுதலை நினைந்துசெல்வல் யானெனக் கூட்டி வினைமுடிவு செய்க. நாணக்கூறியென்றதன்பின்னே ஏத்திப் பழிச்சிச் செல்வலென் றமையான், அவை குறிப்புமொழி.வரைப்பின் மனையென இயையும். ‘வள்ளிய னாகலின் வணங்குவ னிவனென’ என்று பாடமாயின், வண்மையையுடையனாதலால் இவன் எமக்குத் தாழ்ந்து பரிசிலளிப்பனெனக் கருதியென்க. ‘வள்ளியை யாகலின் வணங்குவ னிவனெனக், கொள்ளா மாந்தர் கொடுமை கூற’ என்றதற்கு வள்ளியையாதலின் இவனை வணங்குவேனென நினைந்து வணங்க அதுபாராது நின்பாற் பரிசில் பெறாத மாந்தர்.. தூவவெறியுமென்பது, தூவெறியுமென வகரங்கெட முடிதல் புறநடையாற்கொள்க; விகாரமெனினும் அமையும். ‘தூவவெறியும்’ என்பதூஉம் பாடம். புறநிலை என்பதற்குப் புறங்கடை நின்றநிலையென்றுமாம். ‘இல்லெலி மடிந்த தொல்சுவர்’ என்பதற்கு இல்லெலிதான் தொழில் மடிந்த தொல்சுவரென்று உரைப்பினும் அமையும். நின்னைக் கொடுமை கூறவென்று உரைப்பினும் அமையும். |