158
முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத வண்ண னெடுவரைக்
கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும்
பறம்பிற் கோமான் பாரியும் பிறங்கு மிசைக்
5கொல்லி யாண்ட வல்வி லோரியும்
காரி யூர்ந்து பேரமர் கடந்த
மாரி யீகை மறப்போர் மலையனும்
ஊரா தேந்திய குதிரைக் கூர்வேற்
கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழினியும்
10ஈர்ந்தண் சிலம்பி னிருடூங்கு நளிமுழை
அருந்திறற் கடவுள் காக்கு முயர்சிமைப்
பெருங்க னாடன் பேகனுந் திருந்துமொழி
மோசி பாடிய வாயு மார்வமுற்
றுள்ளி வருந ருலைவுநனி தீரத்
15தள்ளா தீயுந் தகைசால் வண்மைக்
கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங்
கெழுவர் மாய்ந்த பின்றை யழிவரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
இரந்தோ ரற்றந் தீர்க்கென விரைந்திவண்
20உள்ளி வந்தனென் யானே விசும்புறக்
கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி
ஆசினிக் கவினிய பலவி னார்வுற்று
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்
25அதிரா யாணர் முதிரத்துக் கிழவ
இவண்விளங்கு சிறப்பி னியறேர்க் குமண
இசைமேந் தோன்றிய வண்மையொடு
பகைமேம் படுகநீ யேந்திய வேலே.

திணை - அது; துறை - வாழ்த்தியல்; பரிசில்கடாநிலையுமாம்.

குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.

(இ - ள்.) முரசு கடிப்பு அறையவும் வெள்ளிய சங்கு முழங்கவும் வேந்தருடனே பொருத தலைமையையுடைய நெடிய மலைக்கண் ஒலிக்கும் வெளிய அருவி கல்லை உருட்டியோடும் பறம்பிற்கு வேந்தனாகிய பாரியும், உயர்ந்த உச்சியையுடைய கொல்லிமலையை யாண்ட வலிய வில்லையுடைய ஓரியும், காரியென்னும் பெயரையுடைய குதிரையைச் செலுத்திப் 1பெரிய பூசலை வென்ற மாரிபோலும் வண்மையையும் மிக்க போரினையுமுடைய 2மலையனும், செலுத்தப்படாது உயர்ந்த குதிரையென்னுமலையையும் கூரிய வேலையும் கூவிளங்கண்ணியையும் வளைந்த ஆரத்தையுமுடைய எழினி அதியமானும், மிகக் குளிர்ந்த மலையின்கண் இருள் செறிந்த பெரிய முழையினையும் மலைத்தற்கரிய வலியினையுமுடைய தெய்வங்காக்கும் உயர்ந்த சிகரங்களையுடைய பெரிய மலைநாடனாகிய பேகனும், திருந்திய சொல்லையுடைய 3மோசியென்னும் புலவனாற் பாடப்பட்ட ஆயும், ஆசைப்பட்டுத் தன்னை நினைந்து வருவாருடைய வறுமை மிகவும் நீங்கத் தவிராதுகொடுக்கும் கூறுபாடமைந்த வண்மையினையுடைய, பகைவரைத் துரத்திய நள்ளியுமெனச் சொல்லப்பட்ட 4எழுவரும் இறந்தபின்பு கண்டார்க்கு

இரக்கம் வரப் பாடிவருவாரும் பிறருங் கூடி இரந்தோரது துன்பத்தைத் தீர்க்கக் கடவேன் யானென்று நீ இருத்தலால் விரைந்து இவ்விடத்தே பரிசில் பெற நினைந்து வந்தேன், யான்; வானகத்தின்கண்ணே பொருந்த மூங்கில் வளரும் மலையின்கட் சுரபுன்னையோடு ஓங்கி ஆசினியோடு அழகுபெற்ற பலாவின்கண் ஆசைப்பட்டு முள்ளைப் புறத்தேயுடைய முதிர்ந்த பலாப்பழத்தைப் பெற்ற கடுவன் பஞ்சிபோலும் மயிரையுடைத்தாகிய தலையினையுடைய மந்தியைக் கையாற் குறிசெய்து அழைக்கும் தளராத புது வருவாயையுடைய முதிரமென்னும் மலைக்குத் தலைவ! உலகமுழுவதிலும் விளங்குகின்ற தலைமையினையும் இயற்றப்பட்ட தேரினையுமுடைய குமணனே! புகழ் மேம்பட்ட வண்மையுடனே பகையிடத்து உயர்க, நீ எடுக்கப்பட்ட வேல்-எ - று.

ஆசினியொடும் கவினிய வென, ஒடு விரித்துரைக்கப்பட்டது.
ஆசினி யென்பது ஒருமரம்; ஈரப்பலாவென்பாரும் உளர்.
ஆர்வுற்றுப் பயிருமென்க.

பாடிவருநரும் பிறருங்கூடி இரந்தோரற்றம் தீர்க்கவேண்டுமெனக் கருதியென்று உரைப்பாரும் உளர்.


(கு - ரை.) 1. கடிப்பு - பறையடிக்கும் குறுந்தடி. "கடிப்பிகு கண் முரசம்" (நாலடி.100); "கடிப்பிகு முரசே" (சிலப்.17 : "என்றியாம்")

‘துவைத்தல்' என்னும் உரிச்சொல் இசைப்பொருள் உணர்த்தியதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 60. ந; இ. வி.சூ. 285, உரை

1-2. அரசென்றது, சேர, சோழ, பாண்டியரை; பாரி, தன் மலையாகிய பறம்பை முற்றிய இவர்களோடு பொருதமை இந்நூல் 109, 110-ஆம் பாட்டுக்களாலும், அகநானூறு78-ஆம் பாட்டாலும் உணரப்படும்.

3-4. புறநா.201 : 4 - 5.

5. வல்விலோரி : புறநா.152 : 1 - 6, குறிப்புரை; அகநா.208 : 13 - 4. கொல்லியாண்ட ஓரி: புறநா.152 : 31 - 2, குறிப்புரை.

7. புறநா.54 ; 6 - 7, குறிப்புரை; 55 : 15, குறிப்புரை; கலித்.57 : 12.

8. புறநா.168 : 14. "நெடுநெறிக் குதிரைக் கூர்வே லஞ்சி" (அகநா. 372 : 9)

8 - 9. கூவிளங் கண்ணி - வில்வமாலை. கூர்வே லெழினி: "பல்வே லெழினி" (குறுந்.80) ; "உரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவேல், அரவக் கடற்றானை யதிகன்" (சிறுபாண்.102 - 3)

10. புறநா. 126 : 6 - 7.

10-11. புறநா. 151 : 11.

12. பெருங்கனாடன் பேகன்: சிறுபாண்.87.

18-9. புறநா.3 : 24 - 6.

21. கலித்.53 : 1.

24. "துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி" (நற்.57)

25. முதிரம் : புறநா.160 : 13, 163 : 8.

27. புறநா.159 : 28.

28. புறநா.58 : 29.

மு. 'முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவுமென்னும் புறப்பாட்டு,'எழுவர் மாய்ந்த பின்றை' எனப் புறத்திணைத் தலைவர் பலராய் வந்தது', ‘முரசுகடிப் பிகுப்பவும்............வேலே: இஃது இன்னோர்போல எமக்கு ஈயென்ற இயன்மொழிவாழ்த்து' (தொல்.அகத்திணை. சூ. 55, தொல். புறத்திணை. சூ. 35, ந.)

(158)


1பெரியபூசலென்றது, வல்விலோரியுடன் இவன் செய்த பூசலை; "முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வி, லோரிக் கொன்று சேரலர்க் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி" (அகநா.209 : 12 - 16) என்பதனாலும் விளங்கும்.

2காரியென்பவன் இவனே; இவனை மலையமான்றிருமுடிக்காரி யென்றுங் கூறுவர்.

3மோசியென்றது, உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரென்னும் புலவரை; புறநா.127 - ஆம் பாடல் முதலியவற்றின் பின்னுரைகளைப் பார்க்க.

4இச்செய்யுளிற்போலவே "வானம் வாய்த்த வளமலைக் கவாஅற், கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய, வருந்திற லணங்கி னாவியர் பெருமகன், பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண, நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச், சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய, பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற், பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி, வாலுளைப் புரவியொடு வையக மருள, ஈர நன்மொழி யிரவலர்க் கீந்த, வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற், கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ், நீல நாக நல்கிய கலிங்க, மாலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த, சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள், ஆர்வ நன்மொழி யாயு மால்வரைக், கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி, அமிழ்துவிளை தீங்கனி யௌவைக் கீந்த, உரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவேல், அரவக்கடற் றானை யதிகனுங் கரவாது, நட்டோ ருவப்ப நடைப்பரி கார, முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத், துளிமழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு. நளிமலை நாட னள்ளியு நளிசினை, நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக், குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த, காரிக் குதிரைக் காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை யோரியு மென வாங், கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோள், எழுவர்" (சிறுபாண்.84 - 113) என வந்திருத்தல் காண்க.