159
வாழு நாளோ டியாண்டுபல வுண்மையிற்
றீர்தல்செல் லாதென் னுயிரெனப் பலபுலந்து
கோல்கா லாகக் குறும்பல வொதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்டுயின்று
5முன்றிற் போகா முதிர்வினள் பாயும்
பசந்த மேனியொடு படரட வருந்தி
மருங்கிற் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள் பெரிதழிந்து
குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த
10முற்றா விளந்தளிர் கொய்துகொண் டுப்பின்று
நீருலை யாக வேற்றி மோரின்
றவிழ்ப்பத மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த வுடுக்கைய ளறம்பழியாத்
துவ்வா ளாகிய வென்வெய் யோளும்
15என்றாங், கிருவர் நெஞ்சமு முவப்பக் கானவர்
கரிபுன மயக்கிய வகன்கட் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா வேனற் கிழுமெனக்
கருவி வானந் தலைஇ யாங்கும்
20ஈத்த நின்புக ழேத்தித் தொக்கவென்
பசிதினத் திரங்கிய வொக்கலு முவப்ப
உயர்ந்தேந்து மருப்பிற் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலெ னுவந்துநீ
இன்புற விடுதி யாயிற் சிறிது
25குன்றியுங் கொள்வல் கூர்வேற் குமண
அதற்பட வருளல் வேண்டுவல் விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றனிற் பாடிய யானே.

திணை - அது; துறை - பரிசில்கடாநிலை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) தனக்குச் சென்ற ஆண்டுகள் பல உண்டாதலின், இன்னும் போகின்றதில்லை எனதுயிரென்று சொல்லிக்கொண்டு வாழு நாளோடு பலவாக வெறுத்துத் தான்பிடித்த தண்டே காலாகக்கொண்டு ஒன்றற்கொன்று அணுகப் பல அடியிட்டு நடந்து நூலை விரித்தாற் போலும் மயிரையுடையவளாய்க் கண்மறைந்து முற்றத்திடத்துப் புறப்படமாட்டாத மூப்பையுடைய தாயும், பசப்புற்ற மேனியுடனே நினைவு வருத்த வருந்தி 1மருங்கிலே எடுத்த பல சிறுபிள்ளைகள் பிசைந்து மெல்லுதலால் உலர்ந்த முலையினையுடையளாய் மிகவும் வருந்திக் குப்பையின்கண் படுமுதலாக வெழுந்த கீரையினது முன்பு கொய்யப்பட்ட கண்ணிலே கிளைத்த முதிராத இளைய தளிரைப் பறித்துக்கொண்டு உப்பின்றியே நீரை உலையாகக் கொண்டு ஏற்றிக் காய்ச்சி மோரின்றி அவிழாகிய உணவை மறந்து பசிய இலையைத் தின்று 2மாசோடு கூடித் துணிபட்ட உடையினளாய் 3அறக்கடவுளைப் பழித்து உண்ணாளாகிய என்னை விரும்பியோளுமென்று சொல்லப்பட்ட இருவருடைய நெஞ்சமும் காதலிப்ப, வேடர் சுடப்பட்டுக் கரிந்த புனத்தை மயங்க உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைக்கண் ஐவனநெல்லோடு வித்தி இருட்சியுற அழகுபெற்றுக் கோடைமிகுதியான்


1மருங்கு - ஒக்கலை; பழ.46.

2"மாசித் திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளின், ஊசித் துன்ன மூசிய வாடை" (சீவக. 2929)

3"அறனெனு மடவோய்" (சிலப்.18 : 41)

ஈன்றலைப்பொருந்தாத தினைக்கு இழுமெனும் அனுகரணவொலியுடனே 1மின்னும் இடியுமுதலாகிய தொகுதியையுடைய மழை துளியைச் சொரிந்தாற் போலத் தந்த நினது புகழை வாழ்த்திப் பசிதினலால் வருத்தமுற்ற ஈண்டிய எனது சுற்றமும் மகிழ, மேம்பட்டு ஏந்திய கோட்டையுடைய கொல்யானையைப் பெறினும் முகமாறித் தரும் பரிசிலைக் கொள்ளேன்; மகிழ்ந்து நீ யான் இன்புற விரையத் தந்து விடுவையாயிற் சிறிதாகிய குன்றியென்னும் அளவையுடைய பொருளாயினும் கொள்வேன்; கூரிய வேலையுடைய குமணனே! அவ்வின்புறுதற்கண்ணே பட அருளுதலை வேண்டுவேன், 2வென்றிப் புகழையுடைய வசையில்லாத சிறந்தகுடியின்கட் பிறந்த இசைமேம்பட்ட அண்ணலே! நின்னைப்பாடிய யான்-எ - று.

குமண! இசைமேந்தோன்றல்! நிற்பாடிய யான் கொல்களிறு பெறினும் தவிர்ந்துவிடுபரிசில் கொள்ளேன்; இருவர்நெஞ்சமுமுவப்ப, ஒக்கலுமுவப்ப உவந்து இன்புறவிடுதியாயிற் குன்றியுங்கொள்வேன்; அதற்பட அருளல் வேண்டுவலெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

'வாழு நாளோ டியாண்டுபல வுண்மையின்' என்பதற்கு, இன்ப நுகர்ந்து கழிந்த இளமைநாளுடனே மூப்புவந்து துன்பமுற்ற யாண்டு பலவுண்மையி னெனினும் அமையும்.

குன்றியுமென்பதற்குக் குறைந்துமென்று உரைப்பாரும் உளர்.
ஆங்குமென்னும் உம்மை இசைநிறைவு.


(கு - ரை.) 4-5. சினைப்பொருட்கண் வந்த வினையெச்சம் காரணகாரியப் பொருட்டாய் வினைமுதலோடு முடிந்ததற்கு மேற்கோள்; தொல். வினை. சூ. 34, ந.; இ. வி.சூ. 248, உரை.

6. "பசந்த மேனியள் படர்நோ யுற்று" (சிலப்.13 : 68)
படரென்னுமுரிச்சொல், உள்ளுதல் செல்லுதலென்னுங் குறிப்புக்களை உணர்த்து மென்பதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 42, .

7. குறுமாக்கள்: புறநா.94 : 1, குறிப்புரை; கலித்.82 : 9.

7 - 8. புறநா.160 : 18 - 9.

6 - 12. " வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த, குப்பை வேளை யுப்பிலி வெந்ததை, மடவோர் காட்சி நாணிக் கடையடைத், திரும்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு, மழிபசி" (சிறுபாண்.136 - 40) 14. என்வெய்யோளென்றது மனைவியை.

6 - 14. "பசந்த...........வெய்ளோளுமெனச் செய்தெனெச்சத்திடையே அவ்வினையெச்சமுற்றும் அதன்குறிப்பெச்சமும் உடனடுக்கி முடிந்தனவும் பிறவும் ‘பன்முறையானும்' என்றதனாற் கொள்க" (தொல். வினை. சூ. 36, .)


1 "மின்னு முழக்கு மிடியு மற்றின்ன" (ஐந்திணையைம்பது,3)

2 "மறம்வீங்கு பல்புகழ்" (பதிற். 12 : 8) என்பதனுரையைப் பார்க்க.

15. இருவரென்றது - தாயையும் மனைவியையும்; மிக்க மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயனபலவும் செய்தாயினும் புறந்தருக வென்பது அறநூற்பொதுவிதி யாதலின் ‘இருவர் நெஞ்சமுமுவப்ப' என்றார்; குறள், 656, பரிமேல்.17 - 8. கலித். 43 : 4.

19. "கருவி வானந் துளிசொரிந் தாங்கு" (பெரும்பாண்.24); "கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென" (சீவக.2752)

18 - 20. புறநா.160 : 1 - 10.21. புறநா.160 : 4.

28. புறநா.158 : 27.

(159)