160
உருகெழு ஞாயிற் றொண்கதிர் மிசைந்த
முளிபுற் கானங் குழைப்பக் கல்லென
அதிர்குர லேறொடு துளிசொரிந் தாங்குப்
பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
5அவிழ்புகு வறியா தாகலின் வாடிய
நெறிகொள் வரிக்குடர் குனிப்பத் தண்ணெனக்
குய்கொள் கொழுந்துவை நெய்யுடை யடிசில்
மதிசேர் நாண்மீன் போல நவின்ற
சிறுபொ னன்கலஞ் சுற்ற விரீஇக்
10கேடின் றாக பாடுநர் கடும்பென
அரிதுபெறு பொலங்கல மெளிதினின் வீசி
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்
மட்டார் மறுகின் முதிரத் தோனே
செல்குவை யாயி னல்குவன் பெரிதெனப்
15பல்புகழ் நுவலுநர் கூற வல்விரைந்
துள்ளந் துரப்ப வந்தனெ னெள்ளுற்
றில்லுணாத் துறத்தலி னின்மறந் துறையும்
புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
20கூழுஞ் சோறுங் கடைஇ யூழின்
உள்ளில் வறுங்கலந் திறந்தழக் கண்டு
மறப்புலி யுரைத்து மதியங் காட்டியும்
நொந்தன ளாகி நுந்தையை யுள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும்
2525 வினவ லானா ளாகி நனவின்
அல்ல லுழப்போண் மல்லல் சிறப்பச்
செல்லாச் செல்வ மிகுத்தனை வல்லே
விடுதல் வேண்டுவ லத்தை படுதிரை
நீர்சூழ் நிலவரை யுயரநின்
சீர்கெழு விழுப்புக ழேத்துகம் பலவே.

(பி - ம்.) 28 ‘விடுத்தல்’

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) உட்குப்பொருந்திய ஞாயிற்றினது ஒள்ளிய சுடர் தின்னப்பட்ட முளிந்த புல்லையுடைய காடு தளிர்ப்பக் கல்லென ஓசையுண்டாக நடுக்கத்தைச் செய்யும் ஓசையையுடைய உருமேற்றுடனே கூடித் துளியைப் பொழிந்தாற்போலப் பசி தின்னப்பட்டு உலர்ந்த வேர்ப்புடைய உடம்பு அவிழ்புகுவது அறியாதாகலால் வாட்டமுற்ற முடக்கங் கொண்ட பல வரியையுடைய குடர் தன்கண்ணே மூழ்கும் பரிசு குளிரத் தாளிப்புச் சேரப்பட்ட கொழுவிய துவையோடுகூடிய நெய்யுடைய அடிசிலைத் திங்களைச் சேர்ந்த நாளாகிய மீனையொப்பப் பயின்ற பொன்னாற் செய்யப்பட்ட சிறிய நல்ல கலங்களைச் சூழவைத்திருத்தி ஊட்டிக் கேடில்லையாக, பாடுவாரது சுற்றமெனச் சொல்லிப் பெறுதற்கரிய பொன்னாற் செய்யப்பட்ட அணிகலங்களை எளிதாக வழங்கித் தன்னுடைய நட்டோரினும் எம்மோடு நட்புச்செய்த நல்ல புகழையுடைய குமணன், மதுநிறைந்த தெருவினையுடைய முதிரமென்னும் மலையிடத்தான்; நீ அவன்பாற் செல்வை யாயின், நினக்கு மிகவுந் தருவனென நினது பல புகழையும் சொல்லுவார் சொல்ல, அதுகேட்டுக் கடிதாக விரைந்து எனது உள்ளம் செலுத்துதலான் வந்தேன்; எனது மனை உண்ணப்படுவனவற்றைக் கைவிடுதலான் அம்மனையை இகழ்ந்து நினையாது உறைகின்ற புல்லிய உளைமயிர்போலும் குடுமியையுடைய புதல்வன் பலபடியும் பாலில்லாத வறுவிய முலையைச் சுவைத்துப் பால் பெறானாய்க் கூழையும் சோற்றையும் வேண்டி முடுகி முறைமுறையே உள்ளொன்றில்லாத வறிய அடுகலத்தைத் திறந்து அங்கு ஒன்றுங்காணாது அழ, அதனைப் பார்த்து மறத்தையுடைய புலியை வரவுசொல்லி அச்சமுறுத்தியும் 1அம்புலியைக் காட்டியும் அவற்றால் தணிக்க அருமையின் வருந்தினளாய் நின்பிதாவை நினைந்து வெறுத்த நின் செவ்வியைக் காட்டெனச்சொல்லிக் கேட்டல் அமையாளாய் மிகுதிப்பட நனவின்கண்ணும் துயரமுறுவோள் வளப்ப மிகத் தொலையாத செல்வத்தை மிகுத்தனையாய் விரையப் பரிசில் தந்து விடுத்தலை விரும்புவேன், யான்; ஒலிக்குந் திரையையுடைய நீராற் சூழப்பட்ட நிலவெல்லையிலே ஓங்க நினது சீர்மைபொருந்திய சிறந்த புகழைப் பலவாக வாழ்த்துவோம்- எ - று.

அத்தை: அசைநிலை.நன்கலமிரீஇ அடிசிலைக் குடர்குளிப்பத் தண்ணென ஊட்டியென்க.ஊட்டியென ஒரு சொல் தரப்பட்டது.

‘நட்டோர்நட்ட' என்பதற்கு நட்டோரை நாட்டியவெனினும் அமையும்.

‘செல்லாச் செல்வ மீத்தனை' என்பதூஉம், நிலவரை யுணர' என்பதூஉம் பாடம்.


(கு - ரை.) 1. உருவென்னும் உரிச்சொல் உட்கென்னும் பொருளில் வருவதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 4, ந.; இ. வி.சூ. 290, உரை.

4. புறநா. 159 : 21.

2-4. "பெருவறங் கூர்ந்த கானங் கல்லெனக், கருவி வானந் துளிசொரிந் தாங்குப், பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கல்" (பெரும்பாண். 23 - 5)

1-4. புறநா.174 : 23 - 8.

5. அவிழ் - பருக்கை.

7. நெய்யுடை யடிசில்: புறநா.188 : 5.

8-9. பெரும்பாண்.477; "திங்கணலஞ் சூழ்ந்ததிரு மீன்களெனச் செம்பொற், பொங்குகதிர் மின்னுபுகழ்க் கலங்கள்பல பரப்பி" (சீவக.2025)

15. பல்புகழ் - கல்வி, ஆண்மை கொடை முதலியவற்றால் உளவாய புகழ்; மறம்வீங்கு பல்புகழ்" (பதிற்.12 : 8) என்பதனுரையையும், 231-ஆம் குறளின் பரிமேலழகருரையையும் பார்க்க.

16. "ஊக்கந் துரப்ப" (புறநா.8 : 3)

14-6. புறநா.161 : 21.

18. உளைமயிர் - குதிரையின் தலையாட்டத்திலுள்ள மயிர். "புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து" (அகநா.176; 19). பன்மாண் பலகால்; புறநா.365 : 9; கலித். 47 : 8.

18 - 9. புறநா.159 : 7 - 8, 164 : 3 - 5, 211 : 20 - 21.

21 - 2. "அழுகை மகளிர்க் குழுவை செப்ப" (பரி.14 : 12) உரையைப் பார்க்க.

30. ஏத்துகம் பல: புறநா.10 : 13.

29-30. புறநா.166 : 23; "மண்டேய்த்த புகழினான்" (சிலப். 1 : 36) (160)


1கலித். 80 : 19.