161
நீண்டொலி யழுவங் குறைபட முகந்துகொண்
டீண்டுசெலற் கொண்மூ வேண்டுவயிற் குழீஇப்
பெருமலை யன்ன தோன்றல சூன்முதிர்
புருமுரறு கருவியொடு பெயல்கட னிறுத்து
5வளமழை மாறிய வென்றூழ்க் காலை
மன்பதை யெல்லாஞ் சென்றுணக் கங்கைக்
கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்
கெமக்கும் பிறர்க்குஞ் செம்மலை யாகலின்
அன்பி லாடவர் கொன்றாறு கவரச்
10சென்றுதலை வருந வல்ல வன்பின்று
வன்கலை தெவிட்டு மருஞ்சுர மிறந்தோர்க்
கிற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயரவெனக்
கண்பொறி போகிய கசிவொ டுரனழிந்
தருந்துய ருழக்குமென் பெருந்துன் புறுவிநின்
15தாள்படு செல்வங் காண்டொறு மருளப்
பனைமரு டடக்கையொடு முத்துப்பட முற்றிய
உயர்மருப் பேந்திய வரைமரு ணோன்பக
டொளிதிக ழோடை பொலிய மருங்கிற்
படுமணி யிரட்ட வேறிச் செம்மாந்து
20செலனசைஇ யுற்றனென் விறன்மிகு குருசில்
இன்மை துரப்ப விசைதர வந்துநின்
வண்மையிற் றொடுத்தவென் னயந்தனை கேண்மதி
வல்லினும் வல்லே னாயினும் வல்லே
என்னளந் தறிந்தனை நோக்காது சிறந்த
25நின்னளந் தறிமதி பெரும வென்றும்
வேந்தர் நாணப் பெயர்வேன் சாந்தருந்திப்
பல்பொறிக் கொண்ட வேந்தெழி லகலம்
மாணிழை மகளிர் புல்லுதொறும் புகல
நாண்முர சிரங்கு மிடனுடை வரைப்பினின்
30தாணிழல் வாழ்நர் நன்கல மிகுப்ப
வாளம ருழந்தநின் றானையும்
சீர்மிகு செல்வமு மேத்துகம் பலவே.

(பி - ம்.) 13 ‘கண்பொறி மாறிய’ 26 ‘சாத்தருந்து’

திணை - அது; துறை - பரிசிற்றுறை.

அவனை அவர் பாடிப் பகடு பெற்றது.

(இ - ள்.) பெரிதாய் ஒலிக்கின்ற பரப்பினையுடைய கடல் குறைபட நீரை முகந்துகொண்டு விரைந்த செலவையுடைய முகில்கள் வேண்டிய இடத்தே திரண்டு பெரிய மலைபோலும் தோற்றத்தையுடையவாய்ச் சூல் முதிர்ந்து உருமேறிடிக்கும் மின் முதலாகிய தொகுதியுடனே கூடிப் பெயலை முறைமையாகப் பெய்து வளத்தைத் தரும் மழை நீங்கிய கோடைக் காலத்து உயிர்ப்பன்மைகளெல்லாம் சென்று நீருண்டற்குக் கங்கையினது கரையைப் பொரும் மிக்கவெள்ளம் நிறைந்து தோன்றியவாறு போல எங்கட்கும் பிறர்க்கும் தலைமையையுடையையாதலின், யாவரொடும் உறவில்லாத ஆறலைகள்வர் கொன்று வழியிலே அடித்துப் பறித்தலாற் போய் முடிவனவல்ல அருஞ்சுரமாயிருக்கத் தம்முயிர்மேல் அன்பின்றி வலிய கலைகிடந்து அசையிடும் போதற்கரிய அச்சுரத்தின் கண்ணே அன்பின்றிப் பிரிந்தவர்க்கு இற்றை நாளோடுங்கூடி யாண்டு கழிகவெனச் சொல்லிக் கண்ணொளி மழுங்கிய இரக்கத்துடனே 1வலி கெட்டு்ப் பொறுத்தற்கரிய துன்பமுறும் எனது பெரிய வறுமையுறுவோள் நினது 2முயற்சியாலுண்டாகிய செல்வத்தைக் காணுந்தோறும் வியப்பப் பனையையொக்கும் பெருங்கை யுடனே முத்துப்படும்படி முதிர்ந்த உயர்ந்த கொம்பேந்திய மலையை யொக்கும் வலிய களிற்றை ஒளிவிளங்கும் பட்டம் பொலியப் பக்கத்தே யொலிக்கும் மணி ஒன்றற்கொன்று மாறியொலிப்ப ஏறித்தலைமை தோன்ற இருந்து போதலை விரும்பினேன்; வென்றிமிக்க தலைவனே! எனது வறுமை பின்னே நின்று துரத்த நின் புகழ் கொடுவரவந்து நினது கைவண்மையிலே சிலவற்றைத் தொடுத்த என்னைக் காதலித்துக் கேட்பாயாக; சிலவற்றைச் சொல்ல அறிவேனாயினும் அறியேனாயினும் விரைய என் கல்வியளவை ஆராய்ந்தறிந்தனையாய் ஆராயாது சிறந்த நின்னளவை அளந்தறிவாயாக, பெருமானே! எந்நாளும் எனது மிகுதியைக் கண்டு அரசர் நாணும்படி பெயர்வேன்; சாந்து பூசப்பட்டுப் பல நல்ல இலக்கணத்தைப் பொருந்திய மேம்பட்ட அழகினையுடைய மார்பை மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய மகளிர் தழுவுந்தோறும் விரும்ப நாட்காலையே முரசு முழங்கும் இட னுடைத்தாய எல்லையின்கண் நினது தாணிழற்கண் வாழ்வார் நல்ல ஆபரணத்தை மிகுப்ப வாளாற் செய்யும் போரின்கண்ணே உழக்கப்பட்ட நினது படையையும் நினது சீர்மிக்க செல்வத்தையும் பலபடப் புகழ்வேம்-எ - று.

அருஞ்சுரம் சென்று தலைவருவனவல்லவென முற்றாக்கி, அவ்வருஞ் சுரமிறந்தோரெனவும், அன்பின்றி யிறந்தோரெனவும் கூட்டுக.

நின்வண்மையிற் றொடுத்த என்பதற்கு நின்வண்மையால் வளைத்துக் கொள்ளப்பட்ட வெனினும் அமையும்.

புகல, மிகுப்ப என்னும் செயவெனெச்சங்கள், வாளமருழந்த வென்னும் பிறவினையொடு முடிந்தன.

துன்புறுவி மருளப் பகடேறிச் செலல் நசைஇ உற்றனெனெனவும், மகளிர் புகலத் தாணிழல்வாழ்நர் நன்கல மிகுப்ப வாளமருழந்தநின் தானையும் செல்வமும் ஏத்துகமெனவும் கூட்டுக.


(கு - ரை.) 1. "கடல்குறை படுத்தநீர் கல்குறை படவெறிந்து" (பரி.20 : 1); "தடிந்தெழிலி, தானல்கா தாகி விடின்" (குறள், 17)

4. புறநா.174 : 28; "உருமுரறு கருவிய பெருமழை" (அகநா. 158 : 1); "உருமுரறு கருவிய பெருமலை பிற்பட" (மலைபடு.357)

5. என்றூழ் - வெயில்.

4 - 5. புறநா.203 : 1.

9-10. புறநா.136 : 10 - 14; "அற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்தாம், கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர், துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலிற், புள்ளும் வழங்காப் புலம்புகொ ளாரிடை" (கலித்.4 : 3 - 6)

11. தெவிட்டல்: "புரவி புல்லுணாத் தெவிட்ட" (மதுரைக்.660); "புரவி புல்லுணாத் தெவிட்டும்" (நெடுநல். 93 : 4)

13. பொறி - ஒளி; "பொறிவரிப் புகர்முகம்" (பெரும்பாண். 448)

14. புறநா.146 : 7.

15. தாள்படு செல்வம்: (புறநா.148 : 2); "தாளாற்றித் தந்த பொருள்" (குறள்,212)

14-5. கலித்.35 : 1.

16. புறநா.340 : 7; "பனைக்கை மும்மத வேழ முரித்தவன்" (தே.)

17. புறநா. 38, 42, 125, 140, 197, 238, 387; மலைபடு. 572.

16-7. யானைக்கொம்புமுத்தம்: புறநா.170 : 10 ; 11.

19. புறநா.3 : 10, 72 : 3, 165 : 6, 351 ; 1.

23. வல்லினும் - வல்லேனாயினும்; "உணர்த்த வல்லின்" (தொல்.உரி. சூ. 94); வல்லோன் - வன்மையில்லேன்; "பரிசின் மாக்கள் வல்லாராயினும்" (பதிற்.20 : 22) ; புறநா.57 : 1 - 3, குறிப்புரை பார்க்க.

24-5. "சிரப்பான் மணிமவுலிச் சேரமான் றன்னைச், சுரப்பாடியான் கேட்பப் பொன்னாடொன் றீந்தான், இரப்பவ ரென்பெறினுங் கொள்வர் கொடுப்பவர், தாமறிவர் தங்கொடையின் சீர்" (ஒளவையார் பாடல்) என்பது இங்கே அறியற்பாலது.

27. பொறி - உத்தம இலக்கணம்; புறநா.68 : 5. குறிப்புரை.

29. நாண்முரசு : ஐங்குறு. 448; மதுரைக்.232; சிலப்.14 : 14, 17:6; பு. வெ.117.

30. தாணிழல் : “வீரன் றாணிழல்”, “அடிநிழற் றருக வென்றெம் மாணைவேந் தருளிச் செய்தான்” (சீவக.409, 1087)

31. புறநா.24 : 29.

32. புறநா.10 : 13, 160 : 30.

(161)


1. புறநா. 148 : 2, குறிப்புரையையும், "ஊக்க வேந்த னாக்கம் போல" (பெருங். 3. 5 : 20) என்பதையும் பார்க்க.

2 "இம்மியன நுண்பொருள்க ளீட்டிநிதி யாக்கிக், கம்மியரு மூர்வர் களி றோடைநுதல் சூட்டி" (சீவக. 495)