(பி - ம்.) 2 ‘மன்மாண்’ திணை - அது; துறை - பரிசில். பெருஞ்சித்திரனார் குமணனைப் பாடிப் பரிசில்கொணர்ந்து மனையோட்குச் சொல்லியது. (இ - ள்.) நின்னைக் காதலித்து உறையும் நின்சார்வாய மகளிர்க்கும் நீ அன்பு செய்தொழுகப்பட்ட மகளிர்க்கும் பலகுணங்களும் மாட்சிமைப்பட்ட கற்பினையுடைய நினது சுற்றத்து மூத்த மகளிர்க்கும் நமது சுற்றத்தினது மிக்கபசி நீங்க நினக்கு நெடுநாட்படக் குறித்த எதிர்ப்பைத் தந்தோர்க்கும் மற்றும் இன்னதன்மையாரென்று கருதாது என்னொடுகூடி உசாவுவதும் செய்யாது சதுரப்படக் குடிவாழ்க்கை வாழக்கடவேமென்று கருதாது நீயும் யாவர்க்கும் வழங்குவாயாக, எனது மனைக்குரியோயே! பலாப்பழ முதலாயின தூங்கும் முதிரமென்னும் மலைக்குத் தலைவனாகிய திருந்திய வேலையுடைய குமணன் நல்கிய செல்வத்தை-எ - று. மனைகிழவோய்! குமணன் நல்கிய செல்வத்தை நீயும் எல்லோர்க்கும் கொடுமதியெனக் கூட்டுக. நின் பன்மாண்கற்பிற் கிளைமுதலோர்க்குமென இயையும்; நின் றாங்குரைப்பினும் அமையும். நீயுமென்ற உம்மை யானுங்கொடுப்பேன் நீயுங்கொடுவென எச்சவும்மையாய் நின்றது. |