207
எழுவினி நெஞ்சஞ் செல்கம் யாரோ
பருகு வன்ன வேட்கை யில்வழி
அருகிற் கண்டு மறியார் போல
அகனக வாரா முகனழி பரிசில்
5தாளி லாளர் வேளா ரல்லர்
வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே யுலகம் பேணுநர் பலரே
மீளி முன்பி னாளி போல
உள்ள முள்ளவிந் தடங்காது வெள்ளென
10நோவா தோன்வயிற் றிரங்கி
வாயா வன்கனிக் குலமரு வோரே.

(பி - ம்.) 4 ‘அகனகு’

திணையும் துறையும் அவை.

வெளிமான் துஞ்சியபின் அவன் தம்பி இளவெளிமானைப் பரிசில் கொடுவென அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது பெருஞ்சித்திரனார் பாடியது.

(இ - ள்.) எழுந்திருப்பாயாக, இனி எம்முடைய நெஞ்சமே! யாம் போவேமாக; யார்தாம், கண்ணாற் பருகுவது போலும் விருப்பமில்லாத விடத்துத் தம்மருகே கண்டுவைத்தும் கண்டறியாதார்போல உள்ள மகிழ வாராத 1தம்முகம் மாறித் தரப்பட்ட பரிசிலைப் பிறிதோரிடத்துச் செல்ல முயலும் முயற்சியில்லாதோர் விரும்பாரல்லர்? இங்ஙனம் வருவீராக வென்று எதிர்கோடல் வேண்டும் தரமுடையோர்க்கு, பெரிது உலகம்; விரும்புவோரும் பலர்; ஆதலால், மறம்பொருந்திய வலியையுடைய யாளியையொப்ப, உள்ளம் மேற்கோளின்றித் தணியாது, கண்டோர் யாவர்க்கும் தெரியத் தம்மைக் கண்டு இரங்காதவனிடத்தே நின்று திரங்கி உள்ளுறக் கனியாத வலிய பழத்தின் பொருட்டுச் சுழல்வோர்-எ - று.

வன்கனியென்றது, நெஞ்சுநெகிழ்ந்து கொடாத பரிசிலை.

உலமரலும் அலமரல் போல்வதோர் உரிச்சொல்.

வாயா வன்கனிக்கு உலமருவோர் யாரோ? நெஞ்சமே? உள்ளம் உள்ளவிந்தடங்காது யாளிபோல இனி எழுவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

வரிசையோர்க்கு யாளிபோல உள்ளம் உள்ளவிந்தடங்காதென முற்றாக்கி உரைப்பாரும் உளர்.


(கு - ரை.) 1. “எழுவினி வாழியென் னெஞ்சே” (குறுந். 11 : 4) வன்ன வருகா நோக்கமொடு” (பொருந. 77); “பருகு வன்ன நோக்கமொடு” (பெருங். 3. 7 : 80); “பருகுவ னன்ன வார்வத்த னாகி” (நன். பாயிரம்); “பருகுவான் போல நோக்கும்”, “பருகுவனள்போனோக்கி” (பாக. 4. துருவன்பதம். 35; 10. சகடமுதைத்த 21); “மலர்த்தடங் கண்ணே வாயாப், பருகுவான் போல நோக்கி” (கூர்ம. திருக்கல்யாண, 61)

7. இவ்வடியுடன், “காத மிருபத்து நான்கொழியக் காசினியை’ ஓதக் கடல்கொண் டொளித்ததோ-மேதினியிற், கொல்லிமலை தேன் சொரியுங் கொற்றவா நீமுனிந்தால், இல்லையோ வெங்கட் கிடம்” (கம்பர் பாடல்) என்பது ஒப்புநோக்கற்பாலது.

8. “ஆளி நன்மா னணங்குடைக் குருளை, மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி” (பொருந. 139 - 40)
11, “நற்றோண் மருவரற் குலமரு வோரே” (ஐங்குறு. 464)

(207)


1. “முகந்திரிந்து, நோக்கக் குழையும் விருந்து” (குறள். 90)