திணையும் துறையும் அவை. வெளிமானுழைச் சென்றார்க்கு அவன் துஞ்ச இளவெளிமான் சிறிது கொடுப்பக் கொள்ளாது பெருஞ்சித்திரனார் பாடியது, (இ - ள்.) நெடுங்காலம் வாழ்வாயாகவென்று யான் நெடிய வாயிலை அணுகிப் பாடிநின்ற பசியையுடைய காலத்தின்கண்ணே, கோடையான் வெம்மையுற்றபொழுதின்கண் அடைந்தார்க்குக் கொழுவிய நிழலையொத்து யார்கண்ணும் பொய்கூறுதல் அறியாத அறிவையுடையோனது செவியிடத்து நல்லோர் விதைத்த கேள்வியாகிய பயிர் நன்றாக விளைந்ததென நினைத்துப் பரிசிலை விரும்பியிருந்த அவ்விருப்பம் பயனில்லையாக அடப்பட்ட பானையினின்றும் சோறின்றி எரி புறப்பட்டாற்போல அளிக்கத்தக்கார் உண்பாராகவென்று கருதாத அறமில்லாத கூற்றம் கூறுபாடின்றாகி அவனுயிரைக் கொள்ளத் துணிய முறையான் வெய்தாக மார்பின்கண் அறைந்துகொண்ட மகளிர் கையிலணிந்த வளைகளின் முறிகள் வாழைப்பூப்போலச் சிதற முதிய வாக்கினையுடைய சுற்றத்தொடு கூடிய பரிசிலர் இரங்கக் கள்ளியோங்கிய களர்நிலமாகிய பாழ்பட்ட புறங்காட்டின்கண் வெளியவேலையுடைய வீரன்போய் இறந்துபட்டான்; கூற்றம் நோயின்றிருப்பதாக; உயர்ந்த மலையிடத்துப் புலி பார்த்து வீழ்த்த களிறாகிய இரை தப்பின் தனக்கு இரையாதற்குப் போதாத எலியைப்பார்த்து வீழ்த்தாதாகும்; மிக்க திரையையுடைய கடலின்கண் மண்டிய ஆற்றுநீர்போல விரையப்போய் மிகுதியையுடைத்தாகிய பரிசிலைக் கொடுவருவேமாக, எழுந்திராய் நெஞ்சே தெளிவை முன்னிட்டுக்கொண்டு-எ - று. நசைபழுதாக அழற்பயந்தாங்குக் கூற்றந்துணிய விடலை மாய்ந் தனனெனவும், மகளிர் வளைமுறி வாழைப்பூவிற் சிதறவெனவும், துணிபு முந்துறுத்து நெஞ்சமே எழுவெனவுங் கூட்டுக. நோயின்றாகவென்றது குறிப்பிற்றோன்றல். 'ஆங்கது நோயின்றாக' என்றது இளவெளிமான் சிறிது கொடுப்ப அதனை இகழ்ந்து கூறியதென்பாரும் உளர். 'புலிபார்த் தொற்றிய களிற்றிரை பிழைப்பின், எலிபார்த் தொற்றாதாகும்' என்பதூஉம், இவன் பின்கொடுத்த பரிசிலின் சிறுமைநோக்கி நின்றது. 'ஊழை யுருப்ப வெருக்கிய மகளிர்' என்றோதி விதியை வெறுப்ப எருக்கிய மகளிரென்றுரைப்பினும் அமையும். |