164
ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்
பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
5சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென்
மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண
என்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைத்
10தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே.

(பி - ம்.) 10 ‘தடுத்துங்’ 12 ‘மண்ணார்’

திணை - அது; துறை - பரிசில்கடாநிலை.
தம்பியால் நாடுகொள்ளப்பட்டுக் காடுபற்றியிருந்தகுமணனைப் பெருந்தலைச்சாத்தனார் பாடியது.

(இ - ள்.) அடுதலை மிகவும் மறந்தபுடையோங்கிய அடுப்பின்கண் காளாம்பி (காளான்)பூப்ப உடம்புமெலியும் பசியான்வருந்திப் பாலின்மையால்தோலாந்தன்மையுடனே திரங்கித் துளைதூர்ந்த பொல்லாதவறிய முலையை வறிதே சுவைக்குந்தோறும் அழுகின்ற தனதுபிள்ளையது முகத்தைப் பார்த்து நீரால் நிரம்பியஈரிய இமையையுடைய குளிர்ந்த கண்ணையுடைய, என் மனைவியதுவருத்தத்தைப் பார்த்து இந்தவருத்தம் தீர்த்தற்குரியாய்நீயென நினைந்து நின்பால் வந்தேன்; நல்லபோரையுடையகுமண! எனது வறுமைநிலையை நீ அறிந்தாயாயின், இவ்வாறுவறுமையுற்றுநின்ற நிலைமைக்கண் வளைத்தாயினும் பரிசில்கொள்ளாதுவிடேன்; பலவாக அடுக்கப்பட்ட பண்ணுதலமைந்த நரம்பினையுடையதோலாற்போர்க்கப்பட்ட நல்ல யாழையும் மார்ச்சனைநிறைந்த மத்தளத்தினையுமுடைய கூத்தரது மிடியைக்கெடுக்கும் குடியின்கட் பிறந்தோயாதலால்-எ - று.

அடுதலை மிகவும் மறத்தலால் தேய்பின்றிஉயர்ந்த அடுப்பென்றாராம்.

குமண! நீ இன்மைதீர்க்கும்குடிப்பிறந்தோயாதலால் இந்நிலைத் தொடுத்தும்கொள்ளாது அமையலென் எனக் கூட்டுக.


(கு - ரை.) 1. கோடுயரடுப்பு : “பல்கோட்டடுப்பிற் பாலுலையிரீஇ” (அகநா. 141 : 15)

1 - 2. “புனிற்றுநாய் குரைக்கும்புல்லெ னட்டில், காழ்சோர் முதுசுவர்க் கணிச்சிதலரித்த, பூழி பூத்த புழற்கா ளாம்பி, ஒல்குபசி யுழந்த....வளைக்கைக்கிணைமகள்” (சிறுபாண். 132 - 6)

3 - 5. புறநா. 211 : 20 - 21. 7. புறநா.159 : 15, குறிப்புரை.

1 - 7. “சாம்பல்கண் டறியாவாம்பி பூத்த, எலிதுயி லடுப்பிற்றலை மடுத் தொதுங்கிச்,சிறுசிறா ரலறப் பெருமனைக் கிழத்தி, குடங்கையிற்றாங்கிய கொடிற்றினள் குடங்கைக், கடங்கா வுண்கணாறலைத் தொழுக, அழுகுரல் செவிசுட விழுமநோய்மிக்குக், களைகண் காணாதலமரு மேல்வையில்’ (காசிக்கலம்.57)

4-8. ‘இல்லிதூர்ந்த....குமண என்புழி,முலைப்பசைகாணாது அழுகின்றது குழவியென்பது தன்கட்டோன்றியவறுமைபற்றி அவலம் பிறந்தது; மகமுகநோக்கி அழுகின்றாள்என் மனைவியென்பது பிறர்கட்டோன்றிய வறுமையவலம்’(தொல். மெய்ப்பாடு. சூ. 5, பேர்.)

10. தொடுத்தும் - வளைத்தும்; புறநா.135 : 17, 156 : 4; “வளைத்துவாங்கு பொன்னிழவாதே யென்றார்”(திருவால. 28 : 2)

11. பண்ணமை : புறநா. 170 : 13. பச்சை- யாழின் தோற்போர்வை; “விளக்கழ லுருவின்விசியுறு பச்சை” (பொருந. 5); “புகழ்வினைப்பொலிந்த பச்சை” (சிறுபாண். 226)

13. புறநா. 3 : 24 - 6.

10 - 13. “கரப்பிலா நெஞ்சிற்கடனறிவார் முன்னின், றிரப்புமோரேஎ ருடைத்து” (குறள்,1053) என்பது இங்கே அறியற்பாலது.

மு. வாகைத்திணையின்பகுதியாகிய பரிசில்கடைஇய கடைக்கூட்டு நிலைக்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 30, இளம். ‘ஆடுநனி மறந்த....குடிப்பிறந்தோயே: இது பரிசில்கடாநிலை’ (தொல். புறத். சூ. 36,ந.),

(164)