294
வெண்குடை மதிய மேனிலாத் திகழ்தரக்
கண்கூ டிறுத்த கடன்மருள் பாசறைக்
குமரிப்படை தழீஇய கூற்றுவினை யாடவர்
தமர்பிற ரறியா வமர்மயங் கழுவத்
5திறையும் பெயருந் தோற்றி நுமருள்
நாண்முறை தபுத்தீர் வம்மி னீங்கெனப்
போர்மலைந் தொருசிறை நிற்ப யாவரும்
அரவுமிழ் மணியிற் குறுகார்
நிரைதார் மார்பினின் கேள்வனைப் பிறரே.

(பி - ம்.) 2 ‘கண்கூடியத்த’ 3‘தழீஇக்கூற்று’ 4 ‘ரறியாதமர்’ 5 ‘தோற்றினுநுமருணான்’6 ‘தவத்தீர்’ 7 ‘தொருதிற’ 9 ‘நிரை காழ்மாலையெங்கேள்வனைப்’

திணை - தும்பை; துறை - தானைமறம்.

பெருந்தலைச்சாத்தனார் (பி - ம். பெருத்தலைச்சாத்தனார்)


(கு - ரை.) 1. குடையாகிய பூரணசந்திரன்மேலிடத்து ஒளி வீச.

2. கண்கூடிறுத்த - சேர்ந்து தங்கின.கடல் மருள் பாசறை - கடலை யொத்த படைவீடு; கண்டோர்கடலென்று மயங்கத்தக்க போர்க்களமுமாம்; “கடலெனவானீர்க் கூக்குந் தானை”, “கடல்கிளர்ந் தன்னகட்டூர் நாப்பண்” (புறநா. 17, 295); “படுநீர்ப்புணரியிற் பரந்த பாடி” (முல்லை. 28); மருள் -உவமவுருபு.

3. குமரிப்படை - அழியாப்படை;புதிய படையுமாம். கூற்று வினையாடவர் - யமனைப்போலக்கொல்லுதற்றொழிலைச் செய்கின்ற வீரர்; கூற்று -உடலையும் உயிரையும் வேறுவேறாகப் பிரித்துக்கூறுபடுத்தும் கடவுள்.

4. தம்மவரென்றும் அயலாரென்றும்அறியாத போர் மயங்கிய களப்பரப்பில்; தமர் பிறரறியாமைபடைமடமெனப்படும்.

5. இறையும் பெயரும் தோற்றி - நும்முடையதலைவன் பெயர் இன்னதென்பதையும் நும்பெயர் இன்னதென்பதையும்தோன்றச் செய்து; பெயர் - புகழுமாம். நுமருள் - உங்களுள்.

6. நாண் - நாணம்; நாள் - வாழ்நாளுமாம்.

5 - 6. ‘இறையும்......ஈங்கு’ என்றதுஒருவீரன் கூற்று.

7. போர்த்தொழிலை மேற்கொண்டுஒருபக்கத்தே நிற்ப.

8. பாம்பு மணியை உமிழ்ந்து மேயச்சென்றுஅதனையே நினைத்திருக்குமென்பதும் அதனை அணுகுபவர்களைத்துன்புறுத்து மென்பதும் ஈண்டு அறியற்பாலன; “கொந்தொளிமாமணி யிட்டுப் போதுங் கோளரவிற்கருத் திட்டுப்போந்தார்” (தணிகை. விடையருள். 7)

மு. தும்பைத் திணைத்துறைகளுள்‘தானைநிலை’ என்பதற்கு இது மேற்கோள் (தொல்.புறத்திணை. சூ. 14, இளம்.; சூ. 17, ந.)

இப்பாட்டு, மறக்குடி மகளொருத்தியைநோக்கி ஒருவர் கூறியது.

(294)