199
கடவு ளாலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருந லுண்டன மென்னாது பின்னும்
செலவா னாவே களிகொள் புள்ளினம்
அனையர் வாழியோ விரவல ரவரைப்
5புரவெதிர் கொள்ளும் பெருஞ்செய் யாடவர்
உடைமை யாகுமவ ருடைமை
அவர், இன்மை யாகு மவரின் மையே.

(பி - ம்.) 2 ‘உண்டு மமையாது’ 6 - 7 ‘ருடைமை, யின்மை’

திணையும் துறையும் அவை.

பெரும்பதுமனார் பாட்டு.

(இ - ள்.) தெய்வம் உறையும் ஆலமரத்தினது பெரிய கொம்பின்கட் பலபழத்தை நென்னலுமுண்டேமென்னாவாய்ப் பின்னும் அவ்விடத்துப் போதலை அமையா, ஒலி பொருந்தின புள்ளினம்; அத்தன்மையினையுடை யார் இரப்போர்; அவரைக் காத்தற்கு எதிர்ந்துகொள்ளும் மிக்க செய்கையை யுடைய ஆண்மக்களது செல்வமாகும், அவ்விரப்போர் செல்வம்; அவ்வாண் மக்களுடைய வறுமையாகும், அவ்விரப்போருடைய வறுமை-எ - று.

வாழியும், ஓவும் அசைநிலை.


(கு - ரை.) 1 “கடவு ளாலத்து” (நற். 343); “அழல்புரை குழைகொழு நிழறரும் பலசினை, ஆலமுங் கடம்பும்......வேறுவேறு பெயரோய்” (பரி. 4 : 66 - 9); “துறையு மாலமுந் தொல்வலி மராமு, முறையுளி பராஅய்”, “ஆலுங் கடம்பு மணிமார்” (கலித். 101, 106)

1-3. “புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய, மட்டிலா வளநகர்” (சீவக. 93)

1-4. இரவலருக்குப் புள்ளினமும் உபகாரிக்கு ஆலமரமும் உவமைகள்: “பழுமர முள்ளிய பறவையின்” (பொருந. 64) என்பதன் அடிக் குறிப்பைப் பார்க்க.

(199)