239
தொடியுடைய தோண்மணந்தனன்
கடிகாவிற் பூச்சூடினன்
தண்கமழுஞ் சாந்துநீவினன்
செற்றோரை வழிதபுத்தனன்
5நட்டோரை யுயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
இரந்தோர்க்கு மறுப்பறியலன்
10வேந்துடையவையத் தோங்குபுகழ் தோற்றினன்
வருபடை யெதிர்தாங்கினன்
பெயர்படை புறங்கண்டனன்
கடும்பரிய மாக்கடவினன்
நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்
15ஓங்கியல களிறூர்ந்தனன்
தீஞ்செறி தசும்புதொலைச்சினன்
பாணுவப்பப் பசிதீர்த்தனன்
மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
20இடுக வொன்றோ சுடுக வொன்றோ
படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.

(பி - ம்.) 3 ‘நறைகமழ் சாந்த நீவினன்' 4 ‘வழிதேய்த்தனன்' 6 ‘வாய்மொழியலன்' 7 - 8 ‘மேற்செல்லலன் பிறரையொன்றிரப்பு' 11
'கழறினன்' 12 ‘பொருபடை' 14 ‘றேர்மறுங்கினன்', ‘றேரோட்டினன்'15 ‘உடல்சினத்தகளிறு' 16 ‘தீஞ்சொற்றசும்பு' 21 ‘படுகுழிப்'

திணையும் துறையும் அவை.

நம்பிநெடுஞ்செழியனைப் பேரெயின்முறுவலார்பாடியது.

(இ - ம்.) இளைய மகளிரது வளையணிந்ததோளை முயங்கினான்; காவலையுடைய இளமரக்காக்களிற்பூவைச்சூடினான்; குளிர்ந்த மணநாறும் சாந்தைப் பூசினான்;பகைத்தோரைக் கிளையொடுங் கெடுத்தான்; நட்டோரைமிகுத்துக் கூறினான்; இவர் நம்மில் வலியரென்றுகருதி அவர்க்கு வழிபாடு கூறியறியான்; இவர் நம்மில்எளியரென்று கருதி அவரின் மிகுத்துக்சொல்லி யறியான்;பிறரைத் தான் ஒன்றீயெனச் சொல்லி இரந்தறியான்;சூழ்ந்துநின்று இரந்தோருக்கு யாதும் இல்லையென்றுமறுத்தலை அறியான்; அரசருடைய அவைக்களத்தின் கண்தனது உயர்ந்த புகழை வெளிப்படுத்தினன்; தன்மேல்வரும் படையைத் தன் எல்லையுட் புகுதாமல் எதிர்நின்றுதடுத்தான்; புறக் கொடுத்துப் பெயரப்பட்ட படையினதுபுறக்கொடைகண்டு அதன்பின் செல்லாது நின்றான்;விரைந்த செலவையுடைய குதிரையைத் தன் மனத்தினும்விரையச் செலுத்தினான்; நெடிய வீதியின்கண் தேரைச்சூழ இயக்கினான்: உயர்ந்த இயல்பையுடையவாகியகளிற்றைச் செலுத்தினான்; இனிய செறிவையுடைத்தாகியமதுவையுடைய குடங்களைப் பலர்க்கும் வழங்கித் தொலைவித்தான்;பாணர் உவப்ப அவர் பசியை மாற்றினான்; நடுவுநிலைமையின்மயக்குதலையுடைய சொற்களை அந்நடுவுநிலைமையிற் பிழையாதபடிமயக்கந்தீரக் கூறினான்; அப்படிச் செய்யத்தகுவனவெல்லாம்செய்தானாதலான், இப்புகழை விரும்புவோனது தலையைவாளான் அறுத்துப் போகடினும் போகடுக; அன்றிச்சுடினும் சுடுக; பட்டபடி படுக-எ - று.

‘நட்டோரை யுயர்புகூறினன்' என்றது,1 தான் உயர்த்துக்கூறவே யாவரும் உயர்த்துக்கூறுவரென்பதாம்.

‘மயக்குடைய மொழிவிடுத்தனன்'என்பதற்கு உலகவொழுக்கத்தில் மயக்கமுடைய சொற்கள்தன்னிடைப் புகுதாமல் விடுத்தானென்றும், பொருண்மயங்கியசொற்களைத் தன்னிடத்துப் புகுதாமல் விடுத்தானென்றும்உரைப்பினும் அமையும்.

ஒன்றோவென்பது எண்ணிடைச்சொல்.


(கு - ரை.) 3. புறநா. 161: 26- 7.

4- 5. புறநா. 38: 5 - 6; பழ. 398;‘’நட்டவர்குடியுயர்க்குவை, செற்றவ ரரசுபெயர்க்குவை” (மதுரைக்.131 - 2)

6. ‘’பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழுகலையே” (மதுரைக். 201)

6-7. ‘வலியரென...மீக்கூறலன்: எனத்தன்கண்ணும் பிறன் கண்ணுந் தோன்றிய மென்மைபற்றிஇளிவரல் பிறந்தன’ (தொல். மெய்ப்பாடு. சூ.6, பேர்.;இ. வி. சூ. 578, உரை)

19-21. ‘’கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக்கொண்டார், துரும் பெழுந்து வேங்காற் றுயராண் டுழவார்,வருந்தி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம்,வருங்காற் பரிவ திலர்” (நாலடி. 35)

மு. ஈற்றயலடி நாற்சீரான் வந்தவஞ்சிப்பாவிற்கும் (தொல். செய். சூ. 67, இளம்.),பிரிந்திசைத்தூங்கற்குறளடிவஞ்சிப்பாவிற்கும் (யா.வி. சூ. 37) மேற்கோள்.

(239)


1 "மாகஞ் சிறுகக் குவித்துநிதிக்குவை, ஈகையி னேக்கழுத்த மிக்குடைய - மாகொல்,பகைமுகத்த வென்வேலான் பார்வையிற் றீட்டும்,நகைமுகத்த நன்கு மதிப்பு" (நீதிநெறி. 39)