திணை - பொதுவியல்; துறை - கையறுநிலை. அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது, (இ - ள்.) கருதுங்காலத்து வியக்குந்தன்மையையுடைத்து, எத்துணையும் பெரியதலைமையுடனே கூடியும் இவ்விடத்தே இவன் சிறப்புக்களைக் கைவிட்டுவரத் துணிதல்; இவன் இவ்வாறு துணிந்த அதனினும் வியக்குந் தன்மையையுடைத்து, வேற்று வேந்தனது நாட்டின்கண் விளக்கம் அமைந்த சான்றோன் பாதுகாத்துப் புகழ்மேம்பாடாக நட்பே பற்றுக் கோடாக இத்தன்மைத்தாகிய ஓர் இன்னாக்கலத்து இவ்விடத்து வருதல்; இவ்வாறு வருவனென்று துணிந்துசொல்லிய வேந்தனது மிகுதியும் அவன் சொல்லிய சொற் பழுதின்றாக வந்தவனது அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்புக் கைமிக்கது; ஆதலால், தன்செங்கோல் செல்லாத தேயத்துறையும் அமைந்தோனது நெஞ்சைத் தன்னிடத்தே உரித்தாகப்பெற்ற பழைய புகழையுடைய அப்பெற்றிப்பட்ட பெரியோனை இழந்த இத்தேயம் இடும்பையுறுங்கொல்லோ? 1இதுதான் இரங்கத் தக்கது-எ - று. இதுவென்பது, அரசினைக் கைவிட்டு இறந்துபடத்துணிதலென்றுமாம். |