220
பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களி றிழந்த பைதற் பாகன்
அதுசேர்ந் தல்கிய வழுங்க லாலை
வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக்
5கலங்கினே னல்லனோ யானே பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே.

(பி - ம்.) 2 ‘இருங்களி’

திணையும் துறையும் அவை.

அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டுவந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.

(இ - ள்.) பெரிய சோற்றையுண்டாக்கிப் பல்யாண்டு பாதுகாத்த பெரிய களிற்றை இழந்த வருத்தத்தினையுடைய பாகன் அவ்வியானை சேர்ந்து தங்கிய இரக்கத்தையுடைய கூடத்தின்கட் கம்பம் வறிதே நிற்கப் பார்த்துக் கலங்கின தன்மைபோல யான் இறந்துபடுதலின்றிக் கலங்கினேனல்லனோ? பொன்னான் இயன்ற மாலையையுடைய தேர்வண்மையைச் செய்யும் கிள்ளி போகப்பட்ட பெரிய புகழினையுடைய பழைய உறையூரின் மன்றத்தைப் பார்த்து-எ - று.

மூதூர்மன்றங் கண்டு கலங்கினேனல்லனோவெனக் கூட்டுக.

மன்றம் - ஈண்டுச் செண்டுவெளி.

அழுங்கல் - முன்புள்ள ஆரவாரமுமாம்.

இறந்தவென்று சொல்லுதல் இன்னாமையால் போகியவென்றார்.


(கு - ரை.) 1. பெருஞ்சோறு : புறநா. 2 : 16, 235 : 5.

5. பொலந்தார் : புறநா. 2 : 14, 226 : 4.

6. “தேர்வண் கிள்ளி” (புறநா. 43 : 10)

(220)