221
பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே
ஆடுநர்க் கீத்த பேரன் பினனே
அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே
திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே
5மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில்
அனைய னென்னா தத்தக் கோனை
நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று
பைத லொக்கற் றழீஇ யதனை
10வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலக மரந்தை தூங்கக்
கெடுவி னல்லிசை சூடி
நடுக லாயினன் புரவல னெனவே.

(பி - ம்.) 9 ‘பைதற் சுற்றங் கெழீஇ’

திணையும் துறையும் அவை.

அவை நடுகற்கண்டு அவர் பாடியது.

(இ - ள்.) பாடுநர்க்குக்கொடுத்த பலபுகழினையும் உடையன்; கூத்தர்க்குக் கொடுக்கப்பட்ட மிக்க அன்பினையும் உடையன்; அறத்திறமுடை யோர் புகழப்பட்ட நீதிநூற்குத்தக ஆராய்ந்து நடத்திய செங்கோலை உடையன்; சான்றோர் புகழப்பட்ட திண்ணிய நட்பினையுடையன்; மகளி ரிடத்து மென்மையை யுடையன்; வலியோரிடத்து மிக்கவலியையுடையன்; குற்றமற்ற கேள்வியையுடைய அந்தணர்க்குப் புகலிடம்; அத்தன்மையையுடை யோனென்று கருதாது அத்தகுதியையுடையோனை அவ்வாறு கருதாத கூற்றம் அவனது இனிய உயிர் கொடுபோயிற்று; அதனால், பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை அணைத்துக்கொண்டு அக்கூற்றத்தை வைவேமாக வாரீர், மெய்யுரையையுடைய புலவீர்! அகலிய (பி - ம். நல்ல) இடத்தினையுடைய உலகம் துன்பமிகக் கேடில்லாத நல்ல புகழ்ச்சிமாலையைச் சூடி நடப்பட்ட கல்லாயினான் எம்மைப் பாதுகாப்போனெனச் சொல்லி-எ - று.

ஈத்தபுகழ் ஈதலாலுளதாகிய புகழெனவும், ஈத்தவன்பு ஈத்தற்கு ஏதுவாகிய அன்பெனவுங் கொள்க.

வாய்மொழிப்புலவீர்! அத்தக்கோனைக் கூற்றம் இன்னுயிருய்த்தது; அதனாற் புரவலன் கல்லாயினனென ஒக்கல் தழீஇ அதனை வைகம் வம்மோவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

சாயல், மைந்து, புக்கிலென்பன ஆகுபெயர். புக்கில் :

வினைத்தொகை.

1கேடென்பது கெடுவெனக் குறைந்து நின்றது.


(கு - ரை.) 3-4 : சிறுபாண். 207 - 18.

5. “மறவர் மறவ” (பெரும்பாண். 455)

1-6. புறநா. 239 : 1 - 18.

8. புறநா. 3 : 12, 42 : 22.

7-8. “தவத்துறை மாக்கண் மிகப்பெருஞ் செல்வர், ஈற்றிளம் பெண்டி ராற்றாப் பாலகர், முதியோ ரென்னா னிளையோ ரென்னான், கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப” (மணி. 6 : 97 - 100)

12. கெடு : “கெடுவாக வையா துலகம்” (குறள், 117)

12-3. புறநா. 264 : 1 - 4; “ஆடவர், பெயரும் பீடுமெழுதி யதர் தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்” (அகநா. 131 : 9 - 11); “செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட, கல்லேசு கவலை யெண்ணுமிகப் பலவே” (மலைபடு. 388 - 9)

13. உடம்பைப் புதைத்தவிடத்துக் கல்நடுதல் மரபு; அது வீரக்கல் என்று கூறப்படும்.

மு. காஞ்சித்திணைத்துறைகளுள், மன் அடாது வந்த மன்னைக் காஞ்சிக்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 24, .

(221)


1.முதனிலைத் தொழிற்பெயரென்பர் பரிமேலழகர்; குறள் 117, உரை.