222
அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்னிவ ணொழித்த வன்பி லாள
5எண்ணா திருக்குவை யல்லை
என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே.

திணையும் துறையும் அவை.

அவனை, தன்மகன் பிறந்தபின் பெயர்த்துச் சென்று பொத்தியார் எனக்கு இடந்தாவென்று சொற்றது.

(இ - ள்.) தீயால் விளங்கிய ஒளியையுடைய ஆபரணத்தாற் சிறந்த வடிவினையுடையளாய் நின் நிழலினும் ஒரு பொழுதும் நீங்காத நீ விரும்பத் தக்க மனைவி பெறப்பட்ட புகழமைந்த பிள்ளையானவன் பிறந்தபின் வாவெனச்சொல்லி என்னை இவ்விடத்தினின்றும் போக்கிய என்னோடு உறவில்லாதவனே! உன்னோடு என்னிடை நட்பைக் கருதாதிருப்பையல்லை; புகழைவிரும்புவோய்! நீ எனக்குக் குறித்த இடம் யாது? சொல்லுவாயாக-எ-று.

மற்று : அசை.

அழல்போலப் பாடம் (ஒளி) செய்யும் மேனியெனினும் அமையும்.


(கு - ரை.) 3. “வீறுசால் புதல்வர்ப் பெற்றனை” (பதிற். 73)

(222)