(பி - ம்.) 7 ‘எம்மையு’ திணை - பாடாண்டிணை; துறை - புலவராற்றுப்படை. 1சேரமாண் கோக்கோதைமார்பனைப் பொய்கையார் பாடியது. (இ - ள்.) கோதையுடையமார்பிற்கு அணிந்த கோதையானும், அக்கோதையைப் புணர்ந்த மகளிர்சூடிய கோதையானும், கரியகழியின் கண்மலர்ந்த நெய்தற்பூவானும் தேன் நாறாநிற்கும் கானலையுடைய தொண்டி; அஃது எம்முடைய ஊர் ; அவன் எம்முடைய தலைவன்; அத் தன்மையோனிடத்தே போகின்றாயாயின், நீயும் எம்மையும் நினைப்பாயாக; முதிய வாய்மையையுடைய இரவல! நீ அமரின்கண் மேம்படுங்காலத்து நினக்கு உளதாகிய புகழை மேம்படுத்துமவனைக் கண்டேம் யாமெனச் சொல்லி-எ - று. இரவல! நீயும் அன்னோற் படர்குவையாயின் நின்புகழ்மேம்படு நனைக் கண்டனமென எம்மையும் உள்ளெனக் கூட்டுக. கண்டனமென எம்முமுள்ளென்றாரேனும், உள்ளிக் கண்டனமெனச் சொல்லென்பது கருத்தாகக் கொள்க. மோ : முன்னிலை அசைச்சொல். நீயுமென்பதூஉம், எம்முமென்ப தூஉம் எச்சவும்மை. தலைவனது இயல்பையும் ஊரையுங் கூறி, முதுவாயிரவல! எம்மும் உள்ளெனத் தன் தலைமைதோன்றக் கூறினமையால், இது புலவராற்றுப்படைஆயிற்று. |