(பி - ம்.) 3 ‘யாங்ஙன’ 4 - 5 ‘னயலினிரங்கு’ திணையும் துறையும் அவை; துறை-இயன்மொழியுமாம். அவனை அவர் பாடியது. (இ - ள்.) குறிஞ்சிநிலமுடைமையால், நாடனென்று சொல்லுவேனோ? மருதநிலமுடைமையால், ஊரனென்று சொல்லுவேனோ? நெய்த னிலமுடைமையால், ஒலிமுழங்குகின்ற குளிர்ந்த கடலையுடைய சேர்ப்ப னென்று சொல்லுவேனோ? எவ்வாறு சொல்லுவேன் மேம்பட்ட வாளை யுடைய கோதையை? புனங்காப்போர் கிளிகடிகருவியைப் புடைப்பின், அப்புனத்திற்கு அயலாகிய வளைந்த நெற்கதிர்சுழலும் வயலின்கண்ணும், மிக்கநீரையுடைய கடற்கரையின்கண்ணும் உளவாகிய புட்கள் சேர எழுமாதலான்-எ - று. ‘புனவர்தட்டைபுடைப்பின்’ எனக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்பக் கூறினமையான், நாடனென்பதூஉம் அவ்விரண்டு நிலத்துக்கும் கொள்ளப் படும்; எனவே முல்லைநிலமும் உடையனென்றவாறாம். புனவர் தட்டைபுடைப்பின், கழனியிலும் சேர்ப்பினும் புள்ளெழு மாதலால், கோதையை யாங்கனம் மொழிகோவெனக் கூட்டுக. இது, நானிலமுமுடையனாதலிற் பெருஞ்செல்வமுடையன்; நீ அவன்பாற் செல்லென ஆற்றுப்படுத்தவாறு; அவனது இயல்பைப் புகழ்ந்தமையான் இயன்மொழியுமாயிற்று. |