(கு - ரை.) 1. வெள்ளிக்கோள் தென்றிசையில் எழுதல் தீய நிமித்தம். இந்நிகழ்ச்சி மழை பெய்யாமைக்கும் வற்கடம் உண்டாவதற்கும் காரணமென்பர் ; “மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும், தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்” (புறநா. 117 : 1 - 2), “வசையில் புகழ் வயங்குவெண்மீன், திசைதிரிந்து தெற்கேகினும், தற்பாடிய தளியுணவிற், புட்டேம்பப் புயன்மாறி, வான்பொய்ப்பினுந் தான்பொய்யா, மலைத்தலைய கடற்காவிரி” (பட்டினப். 1 - 6), “வறிதுவடக்கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி, பயங்கெழு பொழுதோ டாநிய நிற்ப”, “நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப், பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப”. (பதிற். 24 : 24 - 5, 69 : 13 - 4) ; “கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும், ............ காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை” (சிலப். 10 : 102 - 8) 3. கிணைமகன் - கிணைப்பறை வாசிப்பவன் ; கிணையன். பெரும் பெயர் - பெரும்புகழ். 5. தன்னிலை - தன்னுடைய மேம்பட்ட நிலை. 6. இரியல் போக - கெட. உடைய - தன்பால் உள்ளனவற்றை. 10. பண்ணன் : இப்பாட்டுடைத்தலைவன். 11. வினைப்பகடு - உழவுத்தொழிற்குரிய எருது ; கடா. ஏற்றம் - நீர் இறைத்தற்குரியது ; இப்பெயர் ஏத்தமெனவும் வழங்கும். 13. மணி - ஆராய்ச்சிமணி ; “வாயிற் கடைமணி நடுநா நடுங்க, ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன், அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன்” (சிலப். 20 : 53 - 5). மருகன் - வழித்தோன்றல். 14. பிணித்தல் - கட்டுதல். 16. கண்மாறிலியர் - கண்ணோட்டம் ஒழிவானாக. புரவு - காத்தல.் (388)
|