329
இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லி னாட்பலி யூட்டி
நன்னீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய
மங்குன் மாப்புகை மறுகுடன் கமழும்
5அருமுனை யிருக்கைத் தாயினும் வரிமிடற்
றரவுறை புற்றத் தற்றே நாளும்
புரவலர் புன்க ணோக்கா திரவலர்க்
கருகா தீயும் வண்மை
உரைசா னெடுந்தகை யோம்பு மூரே.

(பி - ம்.) 2 - 3 ‘பலியூட்டி நெய்ந்நறை' 3 ‘நன்னராட்டி'

திணையும் துறையும் அவை.

மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார்.


(கு - ரை.) 1. வீட்டில் அட்ட கள்ளையுடைய ; "இல்லடு கள்ளின் றோப்பி பருகி" (பெரும்பாண்.142)

2. நடுகல்லிற்கு விடியற்காலப் பலியை ஊட்டி ; புறநா.232 : 3 - 4.

3. நறை - தூபம் ; "நறையும் விரையும்" (குறிஞ்சிப்.7). கொளீஇய - கொளுத்திய ; சேர்த்திய.

4. மங்குல் - மேகம். உடன் - ஒருங்கு.

5. முனை - முதன்மை. ஊர் இருக்கையை உடையதாயினும்.

6. அரவுறையும் புற்றைப்போல்வது ஊர் ; "நல்லரா வுறையும் புற்றம் போலவும்" (புறநா. 309 : 3) ; ஊர் அணுகுதற்கரியதென்றபடி.

8 - 9. புறநா.320 : 16 - 8, 367 - 8.

மு.கல்நட்டுக் கால்கொண்டதற்கு மேற்கோள் ; தொல்.புறத்திணை. சூ. 5, ந.

(329)