350
தூர்ந்த கிடங்கிற் சோர்ந்த ஞாயிற்
சிதைந்த விஞ்சிக் கதுவாய் மூதூர்
யாங்கா வதுகொ றானே தாங்காது
படுமழை யுருமி னிரங்கு முரசிற்
5கடுமான் வேந்தர் காலை வந்தெம்
நெடுநிலை வாயிற் கொட்குவர் மாதோ
பொருதா தமருவ ரல்லர் போருழந்
தடுமுரண் முன்பிற் றன்னைய ரேந்திய
வடிவே லெஃகிற் சிவந்த வுண்கட்
10டொடிபிறழ் முன்கை யிளையோள்
அணிநல் லாகத் தரும்பிய சுணங்கே.

(பி - ம்.) 7 ‘பொருந்தாது’ 9 - 10 ‘சிவந்தபுணகட்டொடிமருள முனகை’

திணையும் துறையும் அவை.

மதுரையோலைக்கடைக் கண்ணம்புகுந்தாராயத்தனார் (பி - ம். கண்ணம் புகுதநராயத்தனார்.)


(கு - ரை.) 2. கதுவாய்: புறநா.345 : 15, 347 : 4.

3. யாங்கு - எப்படி?

4. "இடிமுரசியம்ப" (பரி. 4 : 19)

9. "அமருண்கண், ஏந்துகோட் டெழில்யானை யொன்னாதார்க் கவன் வேலிற், சேந்து" (கலித். 57 : 9 - 11);"அடையார்த் துரந்த வருந்திற லயிலவன், படைதலைப் பெயர்த்த கறையெஃகம் போலக், கடைசிவந் தனவே கருங்கயன் மழைக்கண்" (நம்பி.சூ. 147, மேற்.)

(350)