330
வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்த னொருவ னாகித்
தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற்
காழி யனையன் மாதோ வென்றும்
5பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப்
புரவிற் காற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே.

(பி - ம்.) 2 ‘வாள்வல்லத்தன்', ‘வல்லத்தன்' 7 ‘சூடியவன்மை'

திணையும் துறையும் அவை.

மதுரைக் கணக்காயனார்


(கு - ரை.) 1. முனை - சண்டை. நெரிதர - நெரிய.

3. அப்பகைவர் சேனையானது தன்னைக் கடந்து வாராதபடி தடுத்தலால்.4. ஆழி - கரை.

3 - 4. "கடல்விலக் காழியிற் கலக்க மின்றி, அடல்விலக் காளரார்த்தன ரடர்ப்பவும்" (பெருங். 1. 46 : 75 - 6)
குறள்,989, பரிமேல். மேற்.

5. வாரி - வருவாய்.

6. புரவு - இறையிலி நிலம் ; புறநா.260 : 9, 379 : 6.

மு. வஞ்சித்திணைத்துறைகளுள், ‘வருவிசைப் புனலைக் கற்சிறை போல, ஒருவன் றாங்கிய பெருமை' என்பதற்கு மேற்கோள் ; தொல். புறத்திணை. சூ. 7, இளம்,;சூ. 8, ந.

(330)