189
தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்
கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்
5உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே
பிறவு மெல்லா மோரொக் கும்மே
செல்வத்துப் பயனே யீதல்
துய்ப்பே மெனினே தப்புந பலவே.

(பி - ம்.) 5 ‘ உண்பவை நாழியுடுப்பன’

திணையும் துறையும் அவை.

மதுரைக் கணக்காயனார்மகனார் நக்கீரனார் பாடியது.

(இ - ள்.) தெளிந்த நீராற்சூழப்பட்ட உலகமுழுவதையும் பிற வேந்தர்க்குப் பொதுவாதலின்றித்தமக்கே உரித்தாக ஆண்டு வெண்கொற்றக் குடையால்நிழல்செய்த ஒருதன்மையை யுடையோர்க்கும், இடையாமத்தும்நண்பகலும் துயிலானாய் விரைந்த செலவையுடைய மாக்களைப்படுக்கக் கருதிச் செல்லும் கல்வியில்லாதஒருவனுக்கும் உண்ணப் படும்பொருள் நாழி, உடுக்கப்படுமவைஇரண்டே; பிறவுமெல்லாம் ஒக்கும்; ஆதலாற் செல்வத்தாற்பெறும் பயனாவது கொடுத்தல்; செல்வத்தை யாமே நுகர்வேமென்றுகருதின் தவறுவன பல-எ - று.

பலவென்றது, அறம்பொருளின்பங்களை.

பகலை ஒருமாத்திரையென்றும், கடுமாவையானையென்றும், கல்லாத ஒருவனைப் பாகனென்றும்உரைப்பாரும் உளர்.


(கு - ரை.) 1. “திரைதரு முந்நீர் வளாஅக மெல்லாம்”(கலித். 146 : 28)

1 - 2. புறநா. 8 : 1 - 5.

3. நடுநாள்யாமம் : “யாம நடுநாட்டுயில்கொண் டொளித்த” (கலித். 122 : 21)

“அரையிருள் யாமத்தும் பகலுந் துஞ்சார்” (சிலப். 4 : 81, அடியார்.) என்பதற்கு மேற்கோள்.

5. “நாழி யரிசிக்கே நாம்”, “உண்பது நாழி யுடுப்பது நான்குமுழம்“ (நல்வழி,19, 28)

வினைப்பெயர், செயப்படுபொருண்மேற பெயராய்க் காலந் தோன்றி நின்றதற்கு மேற்கோள்; (தொல். வேற்றுமை. சூ. 9, கல்.; ந.)

7 - 8. “வழங்கலுந் துய்த்தலுந் தேற்றாதான் பெற்ற, முழங்கு முரசுடைச் செல்வந் - தழங்கருவி, வேய்முற்றி முத்துதிரும் வெற்ப வதுவன்றோ, நாய்பெற்ற தெங்கம் பழம்” (பழ. 151). கலித். 32 : 11.

(189)