59
ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்
றாடோய் தடக்கைத் தகைமாண் வழுதி
வல்லை மன்ற நீநயந் தளித்தல்
தேற்றாய் பெரும பொய்யே யென்றும்
5காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும்
ஞாயி றனையைநின் பகைவர்க்குத்
திங்க ளனையை யெம்ம னோர்க்கே.

(பி - ம்.) 1 ‘வம்பகட்டு மார்பிற்’

திணை-அது; துறை-பூவைநிலை.

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் பாடியது.

(இ - ள்.) ஆரந்தாழ்ந்த அழகுமிக்க மார்பினையும் முழந்தாளிலே தோய்ந்த பெரிய கையினையுமுடைய அழகுமாட்சிமைப்பட்ட வழுதி! நீ யாவர்க்கும் உவந்து அருளைப் பண்ணுதலைத் தெளிவாக வல்லை! மெய்யாக யாவரிடத்தும் தெளியாய், பெரும! பொய்யை; எந்நாளும் சுடும் வெம்மை யொழியாது கடலிடத்தே கிளர்ந்தெழுகின்ற ஞாயிற்றை ஒப்பை, நின் பகைவர்க்கு; எம்போல்வார்க்குத் திங்களை ஒப்பை-எ-று.

தேற்றாயென்றது, 1தேறாயெனத் தன்வினையாய் நின்றது; தேற்றாயென்பதற்குப் பொய்தெளிக்கப்படாயெனினும் அமையும்.

ஞாயிற்றோடும் திங்களோடும் உவமித்தலையால், இது பூவைநிலைஆயிற்று.


(கு - ரை.) 1. புறநா. 152 : 10.

2. தாடோய்தடக்கை : புறநா. 14 : 11, 90 : 10; பு. வெ. 205.
4. “பொய்ச்சொற் கேளா வாய்மொழி மன்னன்” (கம்ப. கைகேயி. 31)

தேற்றலென்பது ‘அறிதல்’ என்னும் பொருளில் வந்ததற்கு மேற்கோள்; சீவக. 257, 770, ந.

5-6. “கதிர்சினந் தணிந்த” (குறுந். 387; கலித். 16 : 11 - 2)

6-7. புறநா. 55 : 13-4, குறிப்புரை. 6 : 27-8; 56 : 23-4.

(59)


1. புறநா. 202 : 16, உரை.