334
காமரு பழனக் கண்பி னன்ன
தூமயிர்க் குறுந்தா ணெடுஞ்செவிக் குறுமுயல்
புன்றலைச் சிறாஅர் மன்றத் தார்ப்பிற்
படப்பொடுங் கும்மே.....பின்பு.......
5......................................................... னூரே மனையோள்
பாண ரார்த்தவும் பரிசில ரோம்பவும்
ஊணொலி யரவமொடு கைதூ வாளே
உயர்மருப் பியானைப் புகர்முகத் தணிந்த
பொலம்......................................................................ப்
10பரிசில் பரிசிலர்க் கீய
உரவுவேற் காளையுங் கைதூ வானே.

(பி - ம்.) 5 ‘மனையோர்' 6 ‘ரோம்பும்' 7 ‘கைத்தூஉவாளே' 10 ‘பரிசிலர்'

திணையும் துறையும் அவை.

மதுரைத் தமிழக்கூத்தனார்.


(கு - ரை.) 1. கண்பு - ஒருவகைக் கோரை ; "கண்பின், புன்காய்ச்சுண்ணம் புடைத்த மார்பின்" (பெரும்பாண். 220 - 21) ; "களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர" (மதுரைக்.172) ; "கண்பமல் பழனங் கமழ" (மலைபடு.454) ; "கண்பகத்தின் வாரணமே" (தே. திருஞா. தோணிபுரம், "வண்டரங்க" 3)

1. புறநா.333 : 3.

4. படப்பு = படப்பை - வைக்கோற்போர்.

3 - 4. "புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பின்.....................மன்றிற் பாயும் வன்புலத் ததுவே" (புறநா.322 : 4 - 6)

6. ஆர்த்த - நிறைய உண்பிக்க ; "ஏதிலா ராரத் தமர்பசிப்பர்" (குறள், 837)

7. ஊணொலியரவம் - ஊணாலுண்டாகிய ஆரவாரம் ; "புள்ளிமிழ்ந்தன்ன, ஊணொலி யரவம்" (புறநா.173 : 3 - 4). கைதூவாள் - கையொழியாள் ; "கள்ளுண வாட்டியுங் கைதூ வாளே" : புறத்திரட்டிற்கண்டது இது.

மனையோள் (5) கைதூவாள் (7) 11. காளை - தலைவன்.

8 - 11. ‘ஒன்னார் யானை யோடைப் பொன்கொண்டு, பாணர் சென்னி பொலியத் தைஇ", "அண்ணல் யானை யணிந்த, பொன்செ யோடைப் பெரும்பரி சிலனே" (புறநா. 126 : 1 - 2, 326 ; 14 - 5) (334)