(கு - ரை.) 1. மென்புலம் - மருதநிலம். 2. வன்புலம் - முல்லைநிலம். விட்டு - மேய்தற்குவிட்டு. 3. குழைச்சூடு - குழைதலையுடைய சூட்டிறைச்சி. 4. உவியல் - அவியல்; "சாந்த விறகி னுவித்த புன்கம்" (புறநா.168 : 11) 5. புகவு - உணவு ; "வானிணப் புகவிற் கானவர்" (அகநா. 132 : 5) : இச்சொல் புகாவெனவும் வழங்கும்; "அகனாட் டண்ணல் புகாவே" (புறநா. 249 : 7) ; "புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை" (குறுந். 253 : 6) 6. "புதன்முல்லைப் பூப்பறிக்குந்து" (புறநா. 352 ; 4) 8. அரியல் - கள். ஆருந்து - உண்ணும். 10. புறநா. 320 : 16. 11. ‘உம்' உந்தாதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். இடை. சூ. 44, இளம். சே.; ந.; நன். சூ.340, மயிலை.; நன். வி.சூ. 341 ; இ. வி. சூ. 244, உரை. 12. தோளால் - தோளோடு. 13. சாயல் - மென்மை ; "களிமயிற் சாயலுங் கரந்தன ளாகி" (சிலப். 8 : 87) 15. இரீஇயுந்து - கெட்டு ஓடும். 16. புலன் - இடங்கள் 17. சீர்சான்ற - தலைமையமைந்த ; "சீர்சான்ற வுயர்நெல்லினூர்" (மதுரைக். 87 - 8) 18. தித்தன் : ஒரு சோழன். 17 - 8. புறநா. 80 : 6, குறிப்புரை. 19. செல்லாநல்லிசை - கெடாத நல்லபுகழ் ; "செல்லா நல்லிசைப் பெயரொடு நட்டகல்" (மலைபடு. 388 - 9). உறந்தை - உறையூர். குணாது - கிழக்கின்கண் உள்ளது. 18 - 9. "மாவண் டித்தன் வெண்ணெல் வேலி, உறந்தை யன்ன வுரைசா னன்கலம்" (புறநா. 352 : 9 - 10) 20. நெடுங்கை வேண்மானென்பது உழுவித்துண்போரில் ஓர் உபகாரியின் பெயர்.தொல். அகத்திணை. சூ.30, ந. மேற்கோள். 21. அறப்பெயர் - அறத்தாலுளதாகிய புகழ். 20 - 21. பிடவூரென்பது சோழநாட்டிலுள்ளதொரு வைப்புத்தலம். அதில் மாசாத்தனார் கோயில் ஒன்று உண்டு. அவர் பெயரே இப்பாட்டுடைத் தலைவனுக்கு அமைந்துள்ளதுபோலும்; கழறிற்றறிவார் நாயனார் திருக்கயிலாயத்திலே பரமசிவன் திருமுன்பு விண்ணப்பஞ்செய்து அரங்கேற்றிய திருவுலாப்புறத்தைக் கேட்டறிந்துவந்த மாசாத்தனார் அந்நூலை வெளிப்படுத்திய இடம் இவ்வூரே என்பர். இவ்வூரும் இத்தலைவன் பெயரும் பழையநூல் உரைகளிற் காணப்படுகின்றன ; "தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ் செழுந்தண் பிடவூரும்.................தம்முடைய காப்புக்களே" "பேரருளாளன் பிடவூரன்றம்மானே" (தேவாரம்) ; "சேரர் காவலர் விண்ணப்பஞ் செய்தவத் திருவுலாப் புறமன்று, சாரல் வெள்ளியங் கயிலையிற் கேட்டமா சாத்தனார் தரித்திந்தப், பாரில் வேதியர் திருப்பிட வூர்தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கும், நாரவேளைசூ ழுலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே" (பெரிய. வெள்ளானை. 52) ; ‘அவருள், உழுவித்துண்போர், மண்டிலமாக்களும் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும் அழுந்தூரும்.....முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்குரிய வேளாளராம்" (தொல். அகத்திணை. சூ. 30, ந.) 22. நண்பகல் - நடுப்பகல். 23. மாலை - மாலைக்காலத்தில். 27. சிறிதும் - சிறிது நேரமும். 34 - 5. எரி, குளமீன், தாள் என்பன வான்மீன் விசேடங்கள். இவை முறையே தோன்றுதலும் புகைதலும் உலகவறுமைக்கு ஏதுக்கள். 36. செய் - தொழில் ; "பெருஞ்செய் நெல்லின் முகவைப் பாட்டும்" (சிலப். 10 : 137 ; நன். சூ. 289, மயிலை. மேற்.) கொக்குகிர் நிமிரல் - கொக்கின் நகம்போன்ற நீட்சியையுடைய அவிழ் ; "கொக்குகிர் நிமிர லொக்க லார" (புறநா. 398 : 25) ; "கொக்குகிர் நிமிரல் வெண்சோறூட்டுறு கறி" (சீவக. 2972) ; நற். 258 : 6. (395)
|