351
படுமணி மருங்கின பணைத்தாள் யானையும்
கொடிநுடங்கு மிசைய தேரு மாவும்
படையமை மறவரொடு துவன்றிக் கல்லெனக்
கடல்கண் டன்ன கண்ணகன் றானை
5வென்றெறி முரசின் வேந்த ரென்றும்
வண்கை யெயினன் வாகை யன்ன
இவணலந் தாரா தமைகுவ ரல்லர்
என்னா வதுகொ றானே தெண்ணீர்ப்
பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
10தேங்கொண் மருதின் பூஞ்சினை முனையிற்
காமரு காஞ்சித் துஞ்சும்
ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே.

(பி - ம்.) 11 ‘காமர் நாஞ்சில்’

திணையும் துறையும் அவை.

மதுரைப் படைமங்கமன்னியார்.


(கு - ரை.) 1, "படுமணி யிரட்டு மருங்கின்" (முருகு. 80)

1 - 3. புறநா.55 : 7 - 8, குறிப்புரை.

4. "கடலென, வானீர்க் கூக்குந் தானை" (புறநா.17 : 36 - 7)

5. "வென்றெறி முரசின் வேந்தர்" (புறநா.112 : 4)

6. எயினன் : ஓருபகாரி; வாகை : அவனுடைய ஊர்.

7. தருதல் தந்தையின் தொழில்.வேந்தர் (5) அமைகுவரல்லர் (7)

8. என்னாவதுகொறானே : புறநா. 63 : 11, 345 : 19, 347 : 9.

10. தேம் - இனிமை. முனையின் - வெறுத்தால்.

11. காஞ்சி - ஒருவகைமரம்.ஊர் (12) என்னாவதுகொல்? (8)

(351)