247
யானை தந்த முளிமர விறகிற்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயி லெடுப்பி
மந்தி சீக்கு மணங்குடை முன்றிலின்
5நீர்வார் கூந்த லிரும்புறந் தாழப்
பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரு மம்ம தானேதன் கொழுநன்
முழவுகண் டுயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமிய ளாயினும்
10இன்னுயிர் நடுங்குந்த னிளமைபுறங் கொடுத்தே.

(பி - ம்.) 6 ‘பேரமர்க்’ 10 ‘இன்னுயிர்நீங்குந்’

திணையும் துறையும் அவை.

அவள் தீப்பாய்வாளைக் கண்டு மதுரைப்பேராலவாயார்சொல்லியது.

(இ - ள்.) யானை கொண்டுவரப்பட்டஉலர்ந்த மரத்துவிறகால் வேடர் மூட்டப்பட்ட கடைந்துகொள்ளப்பட்டஎரியாகிய விளக்கினது ஒளியை யுடைத்தாகிய மடவியமானாகிய பெரியநிரை வைகிய உறக்கத்தை எழுப்பிமந்தி தூக்கும் அணங்குடைத்தேவியையுடைய முற்றத்துநீர் வடிந்த மயிர் மிக்க புறத்தில் வீழப் பெரியதுன்பமேவிய கண்ணையுடையளாய்ப் புறங்காட்டைப்பார்த்துத் தான் சுழலும், தன் தலைவன் முழவினது கண்மார்ச்சனையுலராத காவலையுடைய அகலிய கோயிலுள் மிகச்சிறிது பொழுது தனித்திருப்பினும் இனிய உயிர்தளரும் தன் இளமை புறங்கொடுத்து- எ-று.

...............................யானவற்கு அஞ்சிநடுங்குதல்..........................................

இளமை புறங்கொடுத்துப் பெருங்காடுநோக்கித் தான் தெருமருமெனக் கூட்டுக.

அம்ம: அசை.


(கு - ரை.) 1-2. புறநா. 251: 5 - 6,குறிப்புரை. கலித். 34: 11.

3. வைகுதல் - துயிலல்; சிலப். 10: 1.

4. ‘’மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றில்”(பெரும்பாண். 497)

(247)