262
நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப்
புனறரு மிளமண னிறையப் பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று
5நிரையொடு வரூஉ மென்னைக்
குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

(பி - ம்.) 2 ‘பைங்கால்’

திணை - வெட்சி; துறை - உண்டாட்டு; தலைத்தோற்றமுமாம்.

............................மதுரைப் பேராலவாயார் பாடியது.

தலைத்தோற்றமாவது:-

‘’உரவெய்யோ னினந்தழீஇ

வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று” (பு. வெ.12)

(இ - ள்.) மதுவையும் அலைத்துண்ணும்படி பிழிமின்; ஆட்டுவிடை யையும் படுமின்; பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய பந்தரின்கண் நீர் கொழித்து (பி - ம். கழித்து)க் கொடுவரப்பட்ட இளைய மணலை நிரம்பப் பரப்புமின்; பகைவரது தூசிப்படையை முறித்துப் பெயர்ந்துபோகிற தனது படைக்குப்பின்னே நின்று நிரையுடனே வருகின்ற என் இறைவனுக்குப் பக்கமறவராய் நிரைகொண்டுவருவோர் அவன் றன்னினும் பெரிய இளைப்பையுடையர்-எ - று.

சாயல் - விடாயாலுண்டான மென்மை.

என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ்சாயலர்; அவர்க்கு நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மினெனக்கூட்டுக.


(கு - ரை.) 1. "மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடை” (முருகு. 232); "மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி” (பெரும்பாண். 143), "செங்கண் மழவிடை கெண்டிச் சிலைமறவர், வெங்கண் மகிழ்ந்து” (பெரும்பொருள் விளக்கம்); விடை - ஆட்டுக்கிடாய்.

2. உவல் - தழை; உவலையென்றும் வழங்கும்; "உவலிடு பதுக்கை” (அகநா. 109: 8); முல்லை. 29; பு. வெ. 169.

6. உழையோர்: எழுவாய்.

மு. வெட்சித்திணைத்துறைகளுள், ‘நுவல்வழித் தோற்றம்’ என்பதற்கும் (தொல். புறத்திணை. சூ. 3, இளம்.), ‘உண்டாட்டு’ என்பதற்கும் (தொல். புறத்திணை. சூ. 3, ந.) மேற்கோள்.

(262)