139
சுவலழுந்தப் பலகாய
சில்லோதிப் பல்லிளைஞருமே
அடிவருந்த நெடிதேறிய
கொடிமருங்குல் விறலியருமே
5வாழ்தல் வேண்டிப்
பொய்கூறேன் மெய்கூறுவல்
ஓடாப் பூட்கை யுரவோர் மருக
உயர்சிமைய வுழாஅ நாஞ்சிற் பொருந
மாயா வுள்ளமொடு பரிசி றுன்னிக்
10கனிபதம் பார்க்குங் காலை யன்றே
ஈத லானான் வேந்தே வேந்தற்குச்
சாத லஞ்சாய் நீயே யாயிடை
இருநில மிளிர்ந்திசி னாஅங் கொருநாள்
அருஞ்சமம் வருகுவ தாயின்
15வருந்தலு முண்டென் பைதலங் கடும்பே.

திணை - அது; துறை - பரிசில் கடாநிலை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) தோள் வடுப்படப்பலமுட்டுக்களையும் காவிய (காவிய - சுமந்த) சிலவாயமயிரையுடைய பல இளையோரும் அடி வருந்த நெடும்பொழுதுஏறிய கொடிபோலும் இடையினையுடைய விறலியரும் எனஇவர் வாழ்தலை விரும்பிப் பொய்சொல்லேன்; மெய்சொல்லுவேன்;புறக்கொடாத மேற்கோளையுடைய வலியோர் மரபிலுள்ளானே!உயர்ந்த உச்சியையுடையதாய் உழப்படாத நாஞ்சிலென்னும்பெயரையுடைய மலைக்கு வேந்தே! மறவாத நினைவுடனே பரிசிற்குவந்துபொருந்திப் பின்புநின்று நின்மணம் நெகிழும் செவ்விபார்க்கும்காலமல்ல, யான் வறுமையுற்று
நிற்கின்ற நிலைமை; நினக்கு வேண்டிற்றுத்தருதலைஅமையான், நின்னுடைய அரசன்; அவ்வரசன் பொருட்டுச்சாதலுக்கு அஞ்சாய், நீ; அவ்விடத்துப் பெரிய நிலம்பிறழ்ந்தாற்போல ஒருநாள் பொறுத்தற்கரிய பூசல்வருவதாயின், வருந்துதலும் உளதாம், எனது பசித்துன்பத்தையுடையசுற்றம்-எ - று.

அதனாற் போர்வருவதன்முன்னே பரிசில்தந்துவிடுவாயாகவென்பது கருத்து.
வேந்து என்றது சேரனை.


(கு - ரை.) 1-2. புறநா. 64 : 1 - 2, குறிப்புரை.

3-4. புறநா. 135 : 1 - 4.

1-4. இளைஞரும் விறலியரும்: "மடமா னோக்கின் வாணுதல்விறலியர், நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி, கல்லாவிளையர் மெல்லத் தைவர" (சிறுபாண். 31 - 3)

5-6. புறநா. 148 : 5 - 6.

7. புறநா. 126 : 4 ; குறள், 385, பரிமேல்.

8. நாஞ்சிற் பொருநன்: புறநா. 140 : 1, 380 : 9.

12. மூதுரை, 6 1 - 13. புறநா. 103.

(139)